கட்சியை கலைக்க மாட்டோம்-ரஜினி ரசிகர்கள்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி, காத்திருந்து அலுத்துப்போன கோவை ரசிகர்கள் சில தினங்களுக்கு முன் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை துவக்கினர். கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தி அமர்க்களப்படுத்தினர்.
இதையடுத்து ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. என் பெயரில் கட்சி தொடங்கிய ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ரசிகர் மன்றத்தி்ல் இருந்து அவர்களை நீக்கினார்.
ஆனால் இந்த அறிக்கை, தனிக்கட்சி கண்ட அவரது ரசிகர்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில் இன்னும் சிலுப்பிக் கொள்ளச் செய்திருக்கிறது.
நாங்கள் கட்சி தொடங்கியது தொடங்கியதுதான். கலைக்க மாட்டோம், தொடர்ந்து நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
நீக்கப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரசிகர்களாகிய நாங்கள் தொடங்கிய கட்சி குறித்தும் அவரின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை வழக்கமான குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வரும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் அவரை கட்சித் தொடங்கும்படி கட்டாயப்படுத்த முடியும். நடிகர் விஜயையோ, அஜீத்தையோ, விக்ரமையோ நாங்கள் போய் கட்டாயப்படுத்த முடியாது.
அரசியலில் ஆர்வமுள்ள ரசிகர்கள் அவரவர் விரும்பும் அரசியல் கட்சிகளில் இணைந்து கொள்ளலாம் என்று கூறி எங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார். தலைவா.. நீங்களா அப்படி சொன்னது?
எங்களை சிறையில் வைத்து பார்ப்பது தான் அவருக்கு விருப்பமானால் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். சட்ட ரீதியாக அவர் எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் மறுப்பேதும் கூறாமல் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்வோம்.
அதே சமயம் ரசிகர் மன்றத்தை விட்டு எங்களை நீக்க யாருக்கும் உரிமையில்லை. எங்களுக்கு ரஜினி மட்டும்தான் தலைவர். வேறு யாருமல்ல.
இறுதியாகவும் உறுதியாகவும் எங்களின் நிலை என்னவென்றால் அவரது அரசியலுக்கு வரும்வரை நாங்கள் தொடங்கிய கட்சியை தொடர்ந்து நடத்துவோம். அவரது படத்தைப் பயன்படுத்துவோம். எங்களின் நிலையை அவருக்கு தெரியப்படுத்த நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரசிகர்கள் அனைவரும் சென்னை ராகவேந்திரா மண்டபத்தின் முன் அணிவகுப்போம்.
உண்டு, இல்லை இரண்டில் ஒன்று சொல்லுங்கள். அதையும் நாங்கள் இறக்கும் முன் சொல்லுங்கள் என்றனர்.


Click it and Unblock the Notifications











