ப்ளாக்கை நிறுத்திவிடுவேன்!-கமெண்ட்களால் அமிதாப் கோபம்

அமிதாப் பச்சன் வலைப்பக்கம் மிகப் பிரபலமான ஒன்று. தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து அதில் எழுதி வருகிறார்.
சமீபத்தில் முதுகுவலியால் பாதிக்கப்பட்டது, தனது மருமகள் ஐஸ்வர்யா ராய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது, நண்பர் அமர்சிங் உடல் நிலை பாதிக்கப்பட்டது என தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் அமிதாப்பை, மோசமான கமெண்ட்கள் எழுதி மேலும் கடுப்பேற்றுகிறார்கள் அவரது ப்ளாக்கைப் படிக்கும் சில நபர்கள்.
இதுகுறித்து அமிதாப் இப்படி எழுதியுள்ளார்:
எனது உடல்நிலை மற்றும் நண்பர்களின் உடல் நிலை குறித்து செக்கப்புகளுக்காக மருத்துவமனை போய், வழியில் மருந்துக் கடையில் தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டு, முதுகுவலிக்காக ஜிம் ஆலோசனைகள் பெற்று வீட்டுக்கு வந்து ப்ளாக்கைத் திறந்தால் மோசமான கமெண்டுகளுக்கு கனத்த இதயத்துடன் பதிலளிக்க வேண்டிய நிலை.
ஒரு பொதுவான கருத்துப் பரிமாற்ற மேடையை தனி நபர் மற்றும் உறவுகள் குறித்த அசிங்கமான கருத்துரைகளை அரங்கேற்றும் இடமாக மாற்றியுள்ளீர்கள். இது என் விலாவில் குத்துவதைப் போன்றது.
ஒவ்வொரு மோசமான கமெண்டையும் படிக்கும் போது எனக்குத் தோன்றுவது இதுதான்... ஒன்று நீங்கள் நிறுத்த வேண்டும்... அல்லது நான் நிறுத்திக் கொள்கிறேன்., என அமிதாப் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











