பிபி சீனிவாசுக்கு பாராட்டு விழா!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பின்னணிப் பாடகர்களில் ஒருவர் பிபி சீனிவாஸ். மயக்கமா கலக்கமா..., நிலவே என்னிடம் மயங்காதே..., சின்னச் சின்ன கண்ணனுக்கு..., காலங்களில் அவள் வசந்தம்..., என்னருகே நீயிருந்தால்..., பால்வண்ணம் பருவம் கண்டேன்..., அவள் பறந்து போனாளே... என காலத்தால் அழியாத காவியப் பாடல்களுக்குக் குரல் கொடுத்தவர் பிபி சீனிவாஸ்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 8 மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனையாளர். சொந்த மொழி தெலுங்கு என்றாலும், தமிழை அதன் அழகு கெடாமல் பாடிய மிகச் சில பாடகர்களில் ஒருவர். எக்கச்சக்க கவிதைகளையும், பாடல்களையும் எழுதியுள்ளார்.
இவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 'ஃபார் எவர் பிபிஎஸ்' எனும் பெயரில் இந்த விழாவை, வாடா இன்ப்ரா நிறுவனத்தின் ஈ பி திருமலை நடத்துகி்றார். பிபி சீனிவாசின் தீவிர ரசிகர் இவர்.
சாதகப் பறவைகள் இசைக்குழுவின் சங்கர் இந்த விழாவில் கச்சேரி நடத்துகிறார். இதில், பி பி சீனிவாசுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ள பி சுசீலா, எஸ் ஜானகி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இளம் பாடகர்கள் ஹரீஷ் ராகவேந்திரா, திப்பு, பரசுராம், ஸ்வேதா மோகன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, உன்னி மேனன், எஸ் என் சுரேந்தர் இதில் பங்கேற்றுப் பாடுகிறார்.
முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மீடியா பார்ட்னராக உள்ளது விஜய் டிவி. மில்லினியம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அண்ணா அரங்கில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. பிபி சீனிவாசுக்கு பாராட்டுவிழா நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











