twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஷாட் கட், மரணம்' - மிஷ்கின் நெகிழ்ச்சி!

    By Staff
    |

    Narain with Vijayalakshmi
    நல்ல சினிமா தர வேண்டுமென்பது மட்டும்தான் என் நோக்கம். என் தனிப்பட்ட வாழ்க்கையை விட சினிமாவை உயர்வாக நினைக்கிறேன். ஷாட், கட் சொல்லும்போத எனது உயிர் போக வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்கிறார் அஞ்சாதே படத்தின் இயக்குநர் மிஷ்கின்.

    அஞ்சாதே படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சென்னையில் சனிக்கிழமை மாலை செய்தியாளர்களைச் சந்தித்தனர் இயக்குநர் மிஷ்கின், படத்தின் நாயகர்கள் நரேன், பிரசன்னா மற்றும் நாயகி விஜயலட்சுமி ஆகியோர்.

    படம் வெளியான அனைத்து இடங்களிலும் மிகச்சிறப்பபான வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட மிஷ்கின், தனது நோக்கம் வணிக அம்சங்களுடன் கூடிய நல்ல படங்களைத் தரவேண்டும் என்பதே என்றார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், ஒரு கோபத்தில் எடுக்கப்பட்ட படம்தான் அஞ்சாதே. இதற்கு முன் நந்தலாலா என்ற படத்துக்கு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு படப்பிடிப்புக்குப் போகும் தருணத்தில், தயாரிப்பாளர் விலகிக்கொண்டு விட்டார்.

    நந்தலாலா என் கனவுப் படம் என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்துக்காக ஒரு ஆண்டு காலம் கிரவுண்ட் வொர்க் செய்தேன். இசைஞானி இளையராஜா இசையில் அருமையான 6 பாடல்கள் தயாராகிவிட்டன. ஸ்னிக்தா என்ற அழகான, நன்கு நடிக்கத் தெரிந்த பெண்ணை இதற்காக மும்பையிலிருந்து அழைத்து வந்திருந்தேன் (இவர்தான் அஞ்சாதே படத்தில் கத்தாழக் கண்ணால... பாடலுக்கு ஆடுபவர்). ஒரு குழந்தைக்கு 6 மாதங்கள் பயிற்சி கொடுத்து நடிக்கத் தயார்படுத்தியிருந்தேன்.

    ஆனால் எல்லாம் சட்டென ஒரு நொடியில் வீணாகிப் போனது. அந்த கோபத்தின் விளைவுதான் இந்தப் படம். எனக்கு பணம் குறிக்கோளல்ல. நல்ல படங்கள் தரவேண்டும். என் சிந்தனைகளை எந்த வக்கிரமுமின்றி அழகான ஆழமான திரைபிம்பங்களாகத் தரவேண்டும். அவ்வளவுதான். அஞ்சாதேவை விட இன்னும் நேர்த்தியான பல படங்களைத் தருவேன்.

    நான் இந்த சினிமாவை நேசிக்கிறவன். எந்த அளவுக்குத் தெரியுமா... என்னுடைய ஏதாவது ஒரு படப்பிடிப்பில் ஷாட்-கட் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் உயிர் பிரிந்து விட வேண்டும். என்றைக்கு நான் சினிமாவுக்கு வந்தேனோ அன்றிலிருந்து சினிமா ஒன்றே போதும் என்ற எண்ணத்துடன் இருப்பவன் நான்....

    அஞ்சாதே திரைப்படம் மிக நீளமாக இருப்பாதாக சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். உண்மைதான். மூன்றேகால் மணி நேரப் படம் இது. எந்தக் காட்சியை வெட்டினாலும் படத்தின் ஜீவன் குறைந்து விடும் என்ற நிலை. மேலும் இப்படத்தின் பல காட்சிகளில் நான்கு முக்கிய பாத்திரங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களின் கோணத்தில் அந்தக் காட்சியைக் காட்ட வேண்டியிருந்தது. ஆனால் எந்தத் திரையரங்கிலும் படத்தின் நீளம் பார்வையார்களுக்கு ஒரு பிரச்சினையாகவே தெரியவில்லை.

    படத்தை அவர்கள் மிகவும் ரசித்துப் பார்க்கும் விதம், பல புதிய முயற்சிகளுக்கு இப்போதே என்னைத் தயார் செய்துகொள்ளும்படி தூண்டுகிறது.

    இந்தப் படத்தின் நாயகர்கள் நரேன், பிரசன்னா இருவருமே எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். நரேனின் உழைப்பைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதே போல பிரசன்னா விரும்பி ஏற்றுக் கொண்ட பாத்திரம் இது. விஜயலட்சுமி மிக இயல்பான நடிகை. அந்த பாத்திரமாகவே ஒன்றிப் போய்விட்டார்... என்றார் மிஷ்கின்.

    அஞ்சாதே படத்தை அடுத்து, விஷாலை வைத்து புதிய படம் இயக்கும் திட்டம் உள்ளதாகவும், ஆனால் அதுகுறித்த பேச்சு வார்த்தைகள் இன்னும் இறுதிவடிவம் பெறவில்லை என்றும் தெரிவித்தார் மிஷ்கின்.

    மிஷ்கின் அடிக்கடி கோபப்பட்டால் நல்லது. அப்பதானே நமக்கு நல்ல பல படங்கள் கிடைக்கும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X