அரசியலில் சீமானின் நாம் தமிழர் இயக்கம்!

நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று விளக்கக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் உணர்ச்சிகரமாக பேசினார்.
அப்போது சீமான் பேசுகையில், திமுக, அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்க வேண்டும். இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது. முற்றிலும் வேறுபடும். மக்களுக்காக தமிழனுக்காக பாடுபடும். திமுக,அதிமுகவை விட இந்த இயக்கம் வெல்லும்.
பிரபாகரனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தமிழ் இன உணர்வாளர்கள் இதை நம்புகிறோம். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மட்டும் கேட்காதீர்கள். நான் சொல்ல மாட்டேன்.
அப்படி சொல்லி பிரபாகரனை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.
நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி; உதைக்கு உதைதான்.
அடி, உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்.
தமிழனின் இன உணர்வை அரசியல்வாதிகள் குறைத்துவிட்டார்கள். தமிழனை இன உணர்வுள்ள தமிழனாக வாழ வைப்பதற்குத்தான் நாம் தமிழர் இயக்கம் உருவாயிற்று.
உலகில் தமிழனுக்கு எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே நாம் தமிழர் இயக்கம் நிற்கும்.
தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம்.
முன்னதாக கூட்டம் நடந்த மாசிலாமணி திருமண மண்டபத்திற்கு வெளியே ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அக்ற போலீஸார் உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு நாம் தமிழர் இயக்கத்தினர் முடியாது என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை அகற்ற போலீஸார் முடிவு செய்தனர்.
இதை எதிர்த்து நாம் தமிழர் இயக்கத்தினர் சாலை மறியலில் குதித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் தொண்டர்களை அமைதிப்படுத்திய சீமான். மறியல் வேண்டாம். வேறு மாதிரியாக இவர்களுக்குப் பதிலடி கொடுக்கலாம் என்று கூறி அனைவரையும் போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.


Click it and Unblock the Notifications











