சொக்க வைக்கும் காத்ரீனா-கரீனா
உலகிலேயே மிகவும் அழகானவர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராய், காத்ரீனா கைப், கரீனா கபூர் ஆகியோரின் அழகு மிகவும் வியப்பாக இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது உலகளவில் ஆங்காங்கே ஏதாவது ஒரு கருத்துக் கணிப்பை எடுத்து விடுவார்கள். உலகிலேயே மிகவும் அழுக்கான நகரம் எது, உலகிலேயே மிகவும் சுத்தமான நகரம் எது, உலகிலேயே பணக்கார நகரம் எது என்று பலவிதமான சப்ஜெக்டுகளில் இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் வரும்.
உலகிலேயே மீசையை அதிகம் நேசிக்கும் மக்கள் யார் என்ற கருத்துக் கணிப்பெல்லாம் கூட சமீபத்தில் நடந்தது.
இப்போதெல்லாம் ஏகப்பட்ட டாப்பிக்குகளில் கருத்துக் கணிப்புகள் அணிவகுக்க ஆரம்பித்து விட்டன. அந்த வரிசையில் உலகிலேயே அழகானவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை ஒன்போல்.காம் என்ற இணையதளம் நடத்தியுள்ளது.
அதன் முடிவுகளை டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில், அமெரிக்கர்களுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாம்.
ஜார்ஜ் க்ளூனி, ஏஞ்செலீனா ஜூலி உள்ளிட்டோர் மிக மிக அழகானவர்கள் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது இடம் பிரேசிலுக்குக் கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தை ஸ்பெயினும், நான்காவது இடத்தை ஆஸ்திரேலியாவும், ஐந்தாவது இடத்தை இத்தாலியும் பிடித்துள்ளன.
ஸ்வீடனுக்கு 6வது இடமும், இங்கிலாந்துக்கு 7வது இடமும் கிடைத்துள்ளன.
இந்தியாவுக்கு இந்த வரிசையில் 8வது இடம். ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், காத்ரீனா கைப் ஆகியோர் சொக்க வைக்கும் அழகுடன் உள்ளதாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு கருத்து சொன்னவர்கள் ஜொள்ளியுள்ளர்.
பிரான்ஸ் 9, கனடா 10 ஆகிய இடங்களில் உள்ளன.
டாப் 20 பட்டியலில் போர்ச்சுகல், ஜப்பான், நெதர்லாந்து ஆகியவை உள்ளன. ஜெர்மனிக்கு 20வது இடமாம்.
இதில் என்ன கொடுமை என்றால், மேற்கண்ட நாடுகளின் சினிமா நடிகைகள், மாடல் அழகிகள் ஆகியோரை அளவுகோலாக வைத்துத்தான் இதில் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதுதான்.
சினிமாக்காரர்களே இல்லாத நாடு அப்போ ரொம்ப அழுக்கான நாடா...!?


Click it and Unblock the Notifications











