ராம்கோபால் படத்தில் முத்துலட்சுமி

இதற்காக சமீபத்தில் அவர் மும்பை சென்று ராம்கோபால் வர்மாவுடன் பேச்சு நடத்தி திரும்பியுள்ளார். வீரப்பன் படத்தை எடுப்பதற்கான அனைத்து தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பைத் தரத் தயாராக இருப்பதாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளாராம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.
இந்தப் படத்தை எடுப்பதற்கு சரியான தருணம் இதுதான் என்று கூறியுள்ள ராம்கோபால் வர்மா, முத்துலட்சுமி தரப்பிலிருந்து ஆரம்பத்திலிருந்தே இப்படத்துக்கு சாதகமான பதிலி வந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் குறித்து முத்துலட்சுமி தட்ஸ்தமிழ் நிருபரிடம் கூறியதாவது:
என் கணவர் வீரப்பன் பற்றிய திரைப்படத்தை உள்ளது உள்ளபடியே எடுப்பதாக ராம்கோபால் வர்மாவும் அவரது குழுவில் உள்ளவர்களும் கூறினார்கள். அவர்களது பேச்சில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் படத்துக்கான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பைத் தர ஒப்புக் கொண்டேன்.
என் கணவரைப் பற்றி, அவரது நல்ல மனசைப் பற்றி முழுமையாக இன்னும் தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை. அதை இந்தப் படம் நிறைவேற்றும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் என்னையும் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். அதில் எனக்குக் கொஞ்சம் தயக்கமிருக்கிறது. வீரப்பனுடன் திருமணமானபோது எனக்கு மிக இளம் வயது. படத்தில் மீண்டும் அப்படியொரு காட்சி வந்தால் அந்த அளவு இளம் தோற்றத்தில் என்னால் வரமுடியாது.
மேலும் வீரப்பனின் நிஜ மனைவியான நான் ஒரு சராசரி நடிகையைப் போல ஒரு நடிகருக்கு கழுத்தை நீட்டுவது போன்ற காட்சியில் தோன்றுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. எனவே, கல்யாணம் செய்து கொள்வது போன்ற காட்சி இல்லாத பட்சத்தில் இந்தப் படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொள்வேன். இருந்தாலும், படத்தின் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாதான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்.
வீரப்பன் குறித்து ராம்கோபால் தவிர வேறு யார் எடுக்கும் படத்திலும் என்னுடைய பங்களிப்போ ஒத்துழைப்போ இல்லை.
இந்தப் படத்துக்காக நான் ராம்கோபாலிடம் பெரும் தொகை வாங்கியிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை கிடையாது. எல்லாரும் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் தப்புத் தப்பாக நினைத்துக் கொள்கிறார்கள்.
வீரப்பன் மனைவியிடம் பெரும் பணம் இருக்கிறது என்று வெளியில் பேசிக் கொள்வது எனக்கும் தெரியும். ஆனால் நிஜத்தில் நான் எந்த அளவு கஷ்டப்படுகிறேன் என்பது என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குப் புரியும்...." என்றார்.
வீரப்பன் குறித்த இந்த புதுப் படத்தை ஏக்தா கபூருடன் இணைந்து தயாரிக்கிறார் ராம்கோபால் வர்மா. ஆனால் படத்தை இயக்கப் போவது அவரல்ல. அவருடைய சர்க்கார் ராஜ் படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் பிரசாந்த் பாண்டே இப்படத்தை இயக்குகிறார்.
படத்தின் நேட்டிவிட்டிக்காக, பெரும்பாலான காட்சிகளை வனத்துறையின் அனுமதியோடு வீரப்பன் காட்டிலேயே படமாக்கவும் திட்டமிட்டுள்ளார் ராமு.
இந்தப் படத்திலாவது, வீரப்பனோடு புதைந்துபோன அந்த மர்ம முடிச்சுகள் அவிழுமா...


Click it and Unblock the Notifications











