ஜேட் கூடியை சந்திக்க ஷில்பாவை அனுமதிக்காத கணவர்

எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்ற இறுதிக் கட்ட நிலைக்கு வந்து விட்டார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜேட் கூடி. அவரது நிலை மிக மிக மோசமாக உள்ளது. மருந்துகள் கொடுத்து அவரை தூக்க நிலையிலேயே வைத்துள்ளனர்.
அவரது மூச்சு எந்த நேரமும் பிரியலாம் என்பதால் டாக்டர்களும், கணவர், தாயார் மற்றும் குடும்பத்தினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பிரதர் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கு கொண்ட கூடியின் நிலை குறித்து வருத்தமும், வேதனையும் தெரிவித்திருந்த ஷில்பா ஷெட்டி கூடியை சந்திக்கப் போவதாக கூறியிருந்தார்.
இதற்காக அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூடியின் தாயார் மற்றும் கணவர் மறுத்து விட்டனராம். இதனால் ஷில்பாவால் கூடியைப் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து ஷில்பா கூறுகையில், லண்டனுக்கு நான் ஞாயிற்றுக்கிழமை வந்தேன். எப்படியும் கூடியை சந்தித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு மருந்துகள் கொடுத்து தூங்க வைத்து வருகின்றனர். மிக மிக அரிதாகத்தான் அவர் விழித்துப் பார்க்கிறார்.
அவரை சந்திக்க நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் கூடியின் அருகில் அவரது தாயாரும், கணவரும் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை மீறி செல்ல முடியாது என்பதால் அதை மதித்து நான் சந்திக்க முயற்சிக்கவில்லை.
இருப்பினும் எப்படியும் அவரைப் பார்த்து விட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன். அவருக்காக நான் தீவிரமாக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்றார் ஷில்பா.


Click it and Unblock the Notifications











