twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'வில்லன் இலக்கணத்தை' மாற்றிய ரகு!

    By Staff
    |

    {image-raghuvaran2=-250_19032008.jpg tamil.filmibeat.com}சென்னை வெறும் நடிகர் என்று கூறி விட முடியாத ஒரு மாபெரும் நடிகர் ரகுவரன். அவரைப் பற்றிப் பேச வேண்டுமானால், அவர் ஒவ்வொரு படத்திலும் பேசிய வசனத்தை வைத்து பக்கம் பக்கமாக விவாதிக்கலாம். அந்த அளவுக்கு பன்முகம் கொண்ட பிரமிப்பான நடிகர் ரகுவரன்.

    தமிழ் சினிமாவின் நீண்ட, நெடிய மனிதர்களில் ரகுவரனையும் சேர்க்கலாம். சத்யராஜ், வில்லனாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரகுவரன். ஆனால் அவருக்குள் இருந்த ஹீரோத்தனத்தை விட வித்தியாசமான நடிப்புத் திறன்தான் பின்னாளில் வென்றது.

    ஹீரோ வாய்ப்புகள் தன்னைத் தேடி வரவில்லையே என்று கவலைப்படாமல், சட்டென்று வில்லன் ரோல்களுக்கு மாறியவர் ரகுவரன்.

    அவரது புதிய வகை வில்லத்தனத்தைப் பார்த்து ரசிகர்கள் புருவம் உயர்த்திப் பார்த்தனர். அவரது பாடி லாங்குவேஜ், வசனத்தைப் பிரித்துப் பிரித்து, நிறுத்தி, நிதானமாக பேசிய விதம், தமிழ் சினிமாவுக்கு படு வித்தியாசமானது.

    இந்த ஸ்டைல், ரசிர்களைக் கவரவே வேகமாக பிக்கப் ஆனார் ரகுவரன். பூவிழி வாசலிலே படத்தில் ஒரு கால் ஊனமுற்றவராக வந்து ஆர்ப்பாட்டமே இல்லாமல் வில்லத்தனம் செய்திருப்பார் ரகுவரன்.

    புருவ அசைவு, உதட்டுச் சுழிப்பு, கண் அசைவு என உடலின் ஒவ்வொரு ஏரியாவையும் நடிக்க வைத்தவர் ரகுவரன். பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், பட்டென நாலே வார்த்தைகளில் தூள் கிளப்பும் திறமை படைத்தவர் ரகுவரன்.

    புரியாத புதில் படத்தில் அவர் பேசிய ஐ நோ, ஐ நோ .. என்ற வசனம் ரொம்பவே பாப்புலர். இன்றும் கூட பலர் அந்த வசனத்தைப் பேசுவதைக் கேட்க முடியும். ஒரு சைக்கோ எப்படி இருப்பான் என்பதை இந்த ரோலில் அசத்தலாக காட்டியிருப்பார் ரகுவரன்.

    அதேபோல தொட்டா சிணுங்கி படத்திலும், சந்தேகப்படும் கணவன் கேரக்டரில் பின்னியிருப்பார். பதட்டம், சந்தேகம், கோபம், டென்ஷன் என அத்தனை உணர்ச்சிகளையும் அவர் காட்டியிருந்த விதம், கிரேட்.

    முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராக இருந்து பார் என்று தான் விடுத்த சவாலை அர்ஜூன் ஏற்று முதல்வர் பதவியில் அமரும்போது, ரகுவரன் ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வை, பல்லாயிரக்கணக்கான வசனங்களுக்கு சமம்.

    பாட்ஷாவில் ரஜினிக்கும், ரகுவரனுக்கும் இடையே நடிப்பில் பயங்கர போட்டி நிலவும். ரகுவரனின் மேனரிசமும், வசனமும் அட்டகாசமாக இருக்கும்.

    அமர்க்களம் படம் ரகுவரனின் அருமையான நடிப்புக்கு முக்கியான படம். ரவுடி அஜீத்தை விட்டு தான் காதலிக்கச் சொன்ன பெண் தனது மகள் என்று தெரிய வரும்போது, அவர் எந்த வசனமும் பேசாமல் உணர்ச்சிகளை தனது முகத்தில் கொண்டு வந்து அவ்வளவு அருமையாக நடித்திருப்பார் ரகுவரன்.

    வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே படு டீக் ஆக டிரஸ் அணிந்து, ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே.

    நல்ல பாதையில் போய்க் கொண்டிருந்த ரகுவரவன், தவறான பாதையில் திரும்பியதால் தடுமாறியது அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும்தான். இடையில் ரகுவரனைப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்த தவிப்பு ரகுவரனுக்கும் புரிந்திருக்கும். அதனால்தான் பழைய பழக்கத்தை விட்டு விட்டதாக அறிவித்தார் ரகுவரன். மீண்டும் படங்களில் மும்முரமாக நடித்து வந்தார்.

    விருதுகள், பலரையும் தேடி ஓடிக் கொண்டிருந்த நிலையில் ரகுவரனைத் தேடி எந்த விருதும் வராதது, அவரை விட அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தம் தந்த விஷயம். ஆனால் ரகுவரன் இதை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எனது நடிப்புக்கு கிடைத்துள்ள ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது என்ற பெருந்தன்மையுடன் இருந்தவர்.

    இளம் நடிகர்களுக்கு நல்ல ஆசானாக விளங்கினார். சூர்யாவை வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்று முதன் முதலில் அட்வைஸ் செய்தவர் ரகுவரன்தான். இப்படியே நடித்துக் கொண்டிருந்தால் காணாமல் போய் விடுவாய், வித்தியாசமான ரோல்களில் நடிக்க முயற்சி செய் என்று அவர் கொடுத்த அட்வைஸ்தான், நந்தா உள்ளிட்ட படங்கள் பக்கம் சூர்யாவைத் திரும்ப வைத்தது.

    அதேபோல விஜய்க்கும் நல்ல நண்பனாக விளங்கியவர் ரகுவரன். தொடர்ந்து அவரது படங்களிலும் நடித்து வந்தவர்.

    கார் பிரியரின் கடைசி தினங்கள்!:

    கார்கள் மீது ரகுவரனுக்கு பெரும் காதல் உண்டு. எந்தக் காராக இருந்தாலும் அதை வெகு வேகமாக ஓட்டுவார். டிரைவரை உட்கார வைத்துக் கொண்டு அவரே தான் காரை ஓட்டுவார்.

    ஆனால் ரகுவரன் தனது கடைசி நாட்களில் காரில் பயணம் செய்யக்கூட முடியாமல் அவதிப்பட்டார். காரணம் மிக மோசமான உடல்நிலை!

    போதையின் தீவிர தாக்குதல் அவரை உருக்குலைத்துப் போட, காரில் உட்கார்ந்து ஒரு கிலோமீட்டர் கூட பயணிக்க முடியாமல் அவதிப்பட்டார் ரகுவரன்.

    இதனால் படப்பிடிப்புக்கு வர அவருக்காகவே ஒரு கேரவன் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். அதில் படுத்தபடிதான் அவரால் பயணிக்க முடிந்தது.

    சூட்டிங் ஸ்பாட்டில் மிக சிரமப்பட்டுத் தான் நடிப்பார். படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் கேரவனுக்குள் போய் படுத்துக் கொள்வாராம்.

    மரணம் நெருங்கிய நிலையில் எட்டு படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் ரோபோ படத்திலும் ஒரு முக்கிய வேடத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்திருந்தார் ஷங்கர்.

    பந்தா, பகட்டு, திமிர் என எதுவும் இல்லாமல், படு சாதாரணமாக பழகியவர் இந்த அசாதாரணமான ரகுவரன்.

    ஒரு மனிதனின் கதை - ரகுவரன் நடித்த டிவி தொடர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அவரது கதையும் கூட.

    சினிமாவுக்கு நல்ல நடிகர்கள் கிடைப்பார்கள், நிறையவே கிடைப்பார்கள். ஆனால் இன்னொரு ரகுவரன்?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X