அரசியல், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மதுரை!-அமீர்

அமீரிடம் உதவி இருந்த இருந்த சசிகுமார் நடித்து, தயாரித்து, இயக்கிய முதல் படம் சுப்பிரமணியபுரம். மதுரை மற்றும் அந்த மக்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் சுப்பிரமணியபுரம்.
இந்தப் படத்தின் 100வது நாள் விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டு அனைவருக்கும் கேடயம் வழங்கிப் பேசினார். அவர் கூறியதாவது:
எந்த மேடையாக இருந்தாலும், வந்துள்ள அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று கூறுவது எனது வழக்கம். அது என்னமோ தெரியவில்லை. பேசிமுடித்த பிறகு அந்த சாந்தியும் சமாதானமும் எனக்கு மட்டும் கிடைப்பதே இல்லை.
அரசியல்வாதிகள் முதல் ஆன்மீகவாதிகள் விரும்புவது, சினிமாதான். இந்த சினிமாவுக்குள் வாரிசுகள்தான் வர முடியும் என்ற சூழலில், சசிகுமார் தனி ஆளாக உள்ளே வந்திருக்கிறான். பாலாவுக்கும், எனக்கும்கூட கிடைக்காத அங்கீகாரம் அவனுக்கு கிடைத்து இருக்கிறது. அதற்காக பெருமைப்படுகிறேன்!
இந்த படத்தின் கிளைமாக்ஸில் வன்முறை அதிகம் இருக்கிறது என்று சிலர் சொன்னார்கள். துரோகம் செய்கிற மனைவியின் கழுத்தை துண்டித்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்கிறவர்கள் நிறைந்த பூமி இது. அதுபோல்தான் நம்பிக்கை துரோகம் செய்தவனின் கழுத்தை அறுக்கிறான், கதாநாயகன். அவன் ஆண்மகன் என்பதை நிரூபிக்க... இந்த மண்ணின் வாழ்க்கை முறையைச் சொல்லும் காட்சி அது.
நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஆசைப்பட்டு நடிக்க வரவில்லை. கோபப்பட்டு எடுத்த முடிவு. சசிகுமார் என்னைப் போல் கோபப்பட வேண்டியதில்லை. இன்னும் நல்ல தமிழ் சினிமாவை அவனால் உருவாக்க முடியும்.
சினிமா- அரசியலை ஆளும் மதுரை!
இந்த மேடையில் அமர்ந்திருக்கும் டைரக்டர்கள் அனைவரும் மதுரைக்காரர்கள்தான். மதுரைதான் இப்போது சினிமாவை ஆண்டு கொண்டிருப்பதுபோல் ஒரு உணர்வு எனக்கு. மதுரைதான் இப்போது அரசியலை ஆண்டு கொண்டிருக்கிறது. சினிமாவையும் ஆண்டு கொண்டிருக்கிறது..., என்றார் அமீர்.
விழாவில் இயக்குநர் சசிகுமார் நன்றி கூறினார்.
படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜெய், கதாநாயகி சுவாதி, வில்லன் சமுத்திரக்கனி, டைரக்டர் சசிகுமார், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் கதிர், மக்கள் தொடர்பாளர் வி.கே.சுந்தர் மற்றும் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு இயக்குநர் கவுதம் மேனன் கேடயங்களை வழங்கினார்.


Click it and Unblock the Notifications











