தமிழ் சினிமாவை ஆளும் மதுரை!-பாலச்சந்தர்

முதல் படத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அடுத்த படத்தையும் தானே இயக்குவது நடிப்பது என அகலக்கால் வைக்காமல், நிதானமாக ஒரு படத்தைத் தயாரித்தார். அதுதான் 'பசங்க'. படம் அனைவர் மத்தியிலும் சசிகுமாருக்கு புதிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது அடுத்ததாக, தான் கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள் படத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தத் துவங்கியுள்ளார்.
இந்தப் படம் முடிந்த பிறகுதான் தனது இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார் சசிகுமார்.
பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடோடிகள் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பாலச்சந்தர், பாலா, அமீர் மற்றும் சேரன் கலந்து கொண்ட இந்த விழாவில் நாடோடிகள் படத்தின் இரு பாடல்கள் திரையிடப்பட்டன.
பாடலை வெளியிட்ட பிறகு பேசிய பாலச்சந்தர், தமிழ் திரையுலகையே மதுரைதான் இன்று ஆள்கிறது. அன்றைக்கு பாரதிராஜா, இளையராஜா என்றால், இன்றைக்கு பாலா, அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் சேரன் என எங்கும் மதுரைக்காரர்கள் மயம். நல்ல படைப்பாளிகள் இங்கிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
சசிகுமார் மற்றும் சமுத்திரக் கனியின் கடின உழைப்பு மற்றும் நேர்த்தியான படைப்பாற்றலைப் புகழ்ந்தார் சேரன்.


Click it and Unblock the Notifications











