'பணத்தைவிட இசைதான் முக்கியம்'-பிரசன்னா!

ஸ்மைல் பிங்கி என்ற குறும்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் இசையமைப்பாளர் பிரசன்னா. சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் படித்தது சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக் கப்பல் கட்டுமானம் குறித்த படிப்பை முடித்துவிட்டு உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் பெர்க்லி இசைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பல்வேறு மொழிகளில் ஏராளமான குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்றதற்காக இசையமைப்பாளர் பிரசன்னாவுக்கு சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் மற்றும் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் நேற்று பாராட்டுவிழா நடந்தது. ஐ.ஐ.டி. பேராசிரியர் கணேஷ், மாணவர் பிரிவு டீன் இடிசாண்டி, பழைய மாணவர் சங்க துணைத் தலைவர் ராகவன், கர்நாடக இசைக்கலைஞர் ரவிகிரன், திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்பட பலர் பாராட்டிப் பேசினார்கள்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பிரசன்னா பேசியதாவது:
நான் ஐ.ஐ.டியில் படித்து முடித்தாலும் மற்ற மாணவர்களைப் போல் ஏதாவது பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர வேண்டும். அல்லது வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. எனக்குப் பிடித்தமான இசைத்துறையில் ஏதாவது செய்ய வேண்டும் என் விரும்பினேன்.
அதற்காக அமெரிக்காவில் உள்ள பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். 70 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் இசைக் கலைஞர்களுடன் இசை கற்றேன். இசையைத்தான் சுவாசித்தேன். படித்து முடித்த பிறகு குறும்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினேன். மனிதாபிமான உணர்வுதான் இருந்தால்தான் இதுபோன்று குறும்படங்களுக்கு வேலைசெய்ய முடியும்.
ஸ்மைல் பிங்கி குறும்படத்திற்கு தற்செயலாகத்தான் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2007ம் ஆண்டே அந்த வேலை முடிந்துவிட்டது. விருதை எதிர்பார்த்து அந்த படத்திற்கு இசையமைக்கவில்லை. ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நாம் நமது கடமையைச் செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்கக் கூடாது என்ற கருதுபவன் நான்.
எதைச் செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். பணம் எனக்கு பெரிதல்ல. இசைதான் முக்கியம். கலைதான் முக்கியம். கலைஞர்கள் கஷ்டப்பட்டு உழைக்க தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள பெர்க்லி இசைக்கல்லூரியைப் போல உலகத்தரமான ஒரு இசைக் கல்லூரியை இந்தியாவில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு உள்ளது, என்றார் பிரசன்னா.
விழா நிறைவில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிட்டார் கருவியை இசைத்தார். அவரது மனைவி பாடகி ஷாலினி பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.


Click it and Unblock the Notifications











