'ரப் நே...' இன்னொரு 'தில்வாலே...': ஷாருக் நம்பிக்கை

யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கிவரும் 'ரப் நே பனா தி ஜோடி' என்ற புதிய படத்தில் நாயகனாக ஷாரூக் நடிக்கின்றார். இதில் அவருக்கு ஜோடியாக 19 வயதான பெங்களூர் மாடல் அழகி அனுஷ்கா ஷர்மா நடிக்கிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குநர் ஆதித்யா சோப்ரா, தனது ரீ என்ட்ரியை, ஷாருக் மூலம் தொடங்குகிறார்.
ரப் நே பனா தி ஜோடி படத்தின் முதல்நாள் சூட்டிங்கில் ஷாரூக், அனுஷ்கா இடம் பெற்ற காட்சிகளை ஆதித்யா இயக்கினார். பஞ்சாபி கிராமப் பெண் வேடத்தில் அனுஷ்கா ஏற்றுள்ளார்.
முன்னதாக இந்த படத்தில் ஷாரூக்கின் ஜோடியாக நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை தயாரிப்பாளர் யாஷ்ராஜ், சோனம் கபூர் மறுத்தனர். கடைசியில் பெங்களூர் மாடல் அனுஷ்கா, ஷாருக் ஜோடியானார்.
படம் பற்றி ஷாரூக் கூறுகையில், யாஷ்ஜி, ஆதி இருவருமே எனக்கு நல்ல பாத்திரங்களை எப்போதுமே தருவார்கள். அந்த பாத்திரங்கள்மூலம்தான் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றேன்.
இந்த புதிய படத்தின் மூலம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தில் எனது நடிப்புக்குக் கிடைத்த புகழ் மீண்டும் எனக்குக் கிடைக்கும் என்பது உறுதி என்றார்.
'மை ஃபேர் லேடி' என்ற ஹாலிவுட் வெற்றிப்படத்தின் திரைக்கதையை தழுவி ரப் நே பனா தி ஜோடி எடுக்கப்படுவதாகவும் பாலிவுட்டில் பேசப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்த படத்தின் வேலைகள் முடிந்துவிடும் என்று தெரிகிறது. ஆதித்யாவின் அறிமுகப்படமான தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களின் இதயம் கவர்ந்த காதல் மன்னனாக ஷாரூக் கானுக்கும் பெயர் வாங்கித் தந்தது.
அதற்குப் பிறகு நடிகை ராணி முகர்ஜியுடன் ஜோடி சேர்ந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானதால் இந்தி படவுலகின் முன்னணி காதல் மன்னனாகவே ஷாரூக் நிலைத்துவிட்டார்.
அவரது 'தில்வாலே...' படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் என்ற தியேட்டரில் கடந்த 1995ல் வெளியானதில் இருந்து இத்தனை வருடமாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்துக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் ஓயவில்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











