ஏலத்துக்கு வந்த உதயம் காம்ப்ளக்ஸ்!

சென்னை அசோக்நகரில் உள்ளது உதயம் காம்ப்ளக்ஸ். இதில் உதயம், சூரியன், சந்திரன் மற்றும் மினி உதயம் என 4 தியேட்டர்கள் உள்ளன. 1983ல் இது கட்டப்பட்ட இந்த திரையரங்க வளாகம் தமிழ் சினிமாவின் சாதனைகள் பலவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தது.
உதயம் காம்ப்ளக்சின் 4 தியேட்டர்களிலும் 2,198 இருக்கைகள் உள்ளன. சத்யம், அபிராமி தியேட்டர்களுக்கு அடுத்தப்படியாக சென்னை நகரில் பெரிய திரையரங்க வளாகம் இதுவே.
ஆனால் இந்த தியேட்டரின் பங்குதாரர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள். ஒரு கட்டத்தில் கோர்ட்டுக்கு சென்று திரையரங்குகளை விற்க வற்புறுத்தினர் இந்தப் பங்குதாரர்கள். இதையடுத்து 4 தியேட்டர்களையும் ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அடிப்படை ஏல தொகையாக ரூ.100 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதயம் காம்ப்ளக்சின் மொத்த பரப்பளவு 1.31 ஏக்கர். (23.8 கிரவுண்ட்) 2400 சதுர அடிக்கு (ஒரு கிரவுண்ட்) ரூ.4.2 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர் தொடர்ந்து திரையரங்குகளை நடத்துவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
காரணம் ரூ.100 கோடிக்கு ஏலம் எடுப்பவர், போட்ட முதலை திரும்பவும் சினிமாவிலேயே ஈட்டுவது இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சாத்தியமா என்று தெரியவில்லை. அல்லது சிட்டி சென்டர் மாதிரி மல்டிப்ளெக்ஸுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றி விடுவார்கள் என்றும் பேசப்படுகிறது.
மேம்பாலம் காரணமா?:
அசோக் பில்லர் பகுதியில் பெரிய மேம்பாலும் கட்டும் திட்டம் உள்ளதாகவும், இதைத் தெரிந்து கொண்டதால்தான் இந்தத் திரையரங்கை விற்கிறார்கள் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.
கடந்த வருடம் மட்டும் வசந்தி, வாணி, ஜெயப்பிரதா, காமதேனு, நேஷனல், ராஜ் ஆகிய 7 தியேட்டர்கள் மூடுவிழா கண்டுள்ளன. இவை வணிக வளாகமாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன.
மைலாப்பூரில் உள்ள காமதேனு, கபாலி தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. அண்ணா சாலையில் இருந்த வெலிங்டன், ஆனந்த், சபையர், சன், அலங்கார், கெயிட்டி, பிளாஸா மற்றும் பாரகன் திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.
இப்போது நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உதயமும் தன் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்காது!.


Click it and Unblock the Notifications











