நயனதாரா காட்சிகளை வெட்டிய விஷால்!

கடந்த வியாழக்கிழமை திரைக்கு வந்தது சத்யம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஷால். அவருக்கு ஜோடி நயனதாரா.
படம் திரையிட்டபிறகு வந்த பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் விஷாலை அதிரிச்சியடைய வைத்தன. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பலரும், நயன்தாரா வருகிற பாடல் காட்சிகள் மற்றும் குழந்தைகளுடன் அவர் அடிக்கும் லூட்டி, இந்தியன் பட நகைச்சுவைக் காட்சிகளை ரீமேக் செய்திருந்தது போன்றவற்றை நீக்கிவிடுமாறு விஷாலைக் கேட்டுக் கொண்டனர்.
அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, அந்தக் காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்டு படம் வேகமாக நகரும் வகையில் சரிப்படுத்தப்பட்டுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
இந்தப்படம் சரியாகப் போகவில்லை என பலரும் அதற்குள் தகவல் பரப்பி வருகிறார்கள். சத்யம் ரிலீசாகி மூன்று நாட்கள் தான் ஆகின்றன. அதற்குள் இந்தப்படம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறுவது அபத்தம். தாய்மார்கள், குடும்பம் சகிதமாகப் படம் பார்க்க வருபவர்கள் இந்தப் படத்துக்கு வர இன்னும் சில தினங்கள் பிடிக்கும்.
இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இருந்தாலும், ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கருத்துக்களுக்கு இணங்க, போரடிக்கும் பல காட்சிகளைக் குறைத்துள்ளேன். மொத்தம் 22 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு, இப்போது படம் படு விறுவிறுப்போடு அமைந்துள்ளது, என்றார்.
வெட்டப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் நயனதாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நயன்-விஷால் நடித்த ஒரு பாடலும் முழுமையாக வெட்டப்பட்டு விட்டதாம்.
எதையும் அளவோடு தரவேண்டும். கவர்ச்சியே என்றாலும் அளவுக்கு மிஞ்சினால்...?


Click it and Unblock the Notifications











