twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈழத் தமிழர் பற்றி படம் - அமீர்

    By Staff
    |

    Amir
    திரையுலகை விட்டுப் போவதற்குள் ஈழ மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பைத் தருவேன் என்கிறார் இயக்குநர் அமீர்.

    அலைகள் மூவீஸ் சார்பில் டென்மார்க் வாழ் ஈழத் தமிழர் கே.எஸ்.துரை தயாரித்து இயக்க, அவரது மகன் வசந்த் செல்லத்துரை நாயகனாக நடிக்கும் இளம்புயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிலிம்சேம்பர் திரையரங்கில் நடந்தது.

    விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட, அதை அமீர் பெற்றுக் கொண்டார்.

    விழாவில் பேசிய தொல் திருமாவளவன், பத்திரிகைகள் ஆதாரமின்றி கிசுகிசுக்களை எழுதி நடிகர் நடிகைகளின் பெயரைக் கெடுப்பதாகக் குறைபட்டார். தான் சினிமாவே கதி என்று கிடக்கவில்லை என்றும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துக்களைச் சொல்லும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார்.

    முன்னதாக, விழாவில் அமீர் பேசியதாவது:

    சில தினங்களுக்கு முன் ஏஆர் ரஹ்மான் பற்றி எதார்த்தமாக நான் சொன்ன சில கருத்துக்களை, ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்கிற பாணியில் எழுதிவிட்டார்கள். என்னுடைய ஒரு கருத்தைச் சொல்கிறேன். அவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வியை மேடையில் வைத்தேன். அது கண்டனமல்ல.

    அதனால்தான், எந்த விழாவுக்கும் இனி போகவே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் இந்த விழாவுக்கு வந்ததன் காரணம், இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் ஈழத் தமிழர்கள்.

    நான் பெர்லினுக்கு பருத்தி வீரன் திரையிடலுக்காகச் சென்றிருந்தேன். அப்போது 50-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தினமும் வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

    நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அவர்கள் விடாமல் நின்று கூட்டிப் போனார்கள். என்னைப் பார்த்ததும் அந்த குடும்பத்துப் பெண்கள் அழுதனர். எனக்கு சங்கடமாகி விட்டது. இதற்காகவா என்னைக் கூட்டி வந்தீர்கள்? என்றேன்.

    இல்லை தம்பி, உங்க பருத்தி வீரன் பார்த்தோம். எங்களுக்கு ஊர் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் உங்களைப் பார்க்க விரும்பினோம் என்று நெகிழ வைத்தனர்.

    இந்த தருணத்தில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நான் இந்தத் திரையுலகை விட்டுப் போவதற்குள் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, அவர்களுக்கான விடிவு குறித்து விளக்கும் ஒரு அழுத்தமான படைப்பைத் தந்துவிட்டுத்தான் போவேன்.

    இந்த நேரத்தில் இந்தப் படத்தை எடுத்திருக்கும் துரைக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.

    முன்பு நடிகர்கள் கையிலிருந்த சினிமாவை கஷ்டப்பட்டு இயக்குநர்கள் மீட்டார்கள். பின்னர் அதைத் தயாரிப்பாளர்கள் ஆர்பி சௌத்ரி போன்றவர்கள் தங்கள் வசமாக்கினார்கள். புதுப்புது இயக்குநர்களை உருவாக்கினார்கள். சௌத்ரி ஒருவர் மட்டுமே 37 இயக்குநர்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்.

    ஆனால் தமிழ் சினிமா மீண்டும் நடிகர்கள் கைக்குப் போய்விட்டது. வழக்கமான மசாலா சினிமாவாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து சினிமாவை மீட்டெடுக்கும் போராட்டத்தில்தான் என்னைப் போன்ற சிலர் இறங்கியிருக்கிறோம். இந்த நேரத்தில் நீங்களும் அதே பாணி மசாலா கதைகளோடு, படைப்புகளோடு வருகிறீர்களே என்பதுதான் என் ஆதங்கமெல்லாம்.

    இது முதல்படம் என்பதால் மன்னிப்போம். ஆனால் அடுத்தடுத்த படைப்புகளில் உங்கள் தனித் திறமையைக் காட்டுங்கள். எதற்காக இந்தத் துறைக்கு வந்தீர்களோ அந்த நோக்கம் சிதையாத மாதிரி படங்களை எடுங்கள், என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X