1 பெண், 2 கணவர்கள்!-மீண்டும் சர்ச்சை
ஏதாவது பரபரப்பாக போஸ்டர் அடித்து ஒட்டினால்தானே கவனிக்கிறார்கள்...
எதையாவது செய்தால் அட்லீஸ்ட் போஸ்டராவது பிரபலமாகிவிடும் என்ற முயற்சியில் 'பிரதி ஞாயிறு' இயக்குநர் எம்.எஸ்.அன்பு இறங்க... அவர் எதிர்பார்த்த பப்ளிசிட்டி கிடைத்தே விட்டது!!
'மிட்டாய்' என்ற பெயரில் ஒரு புதிய படம் இயக்குகிறார் இப்போது அன்பு.
இப்படத்துக்காக ஒரு பெண்ணும் அவருடன் இரு வாலிபர்களும் மணக்கோலத்தில் வருவது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்னும் சிலவற்றில் முதலிரவு அறையில் இரு கணவர்களின் அணைப்பில் ஆனந்தமாக மனைவி கட்டுண்டு கிடப்பது போல காட்சிகள்.
கொஞ்ச நாளைக்கு முன்பு மோனா சோப்ரா என்ற இந்தி நடிகை நடித்தாரே ஒரு படம் (தலைப்பு: தப்பு பண்ணிட்டோம்... மன்னிச்சிருங்க!) , அதே ஸ்டைலில் இந்த படத்துக்கும் ஸ்டில்களை வெளியிட்டிருந்தார் அன்பு.
அதாவது ஒரு பெண் இருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கதை. இந்தக் கதையும் காட்சிகளும் விளம்பரமும் நமது கலாசாரத்துக்கு எதிரானவை என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இதுகுறித்து டைரக்டர் அன்பு கூறியதாவது:
மிட்டாய் படம் அழகான (!) காதல் கதை. சந்தோஷ், பிரபா என இரு கதாநாயகர்களும் மாயா உன்னி என்ற கதாநாயகியும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை கலாசாரத்துக்கு எதிரானது என விமர்சிக்கப்படுகிறது. இரு கதாநாயகர்களும் கதாநாயகியும் மணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் படங்களை பார்த்து விட்டு விமர்சிக்கின்றனர். அது சும்மா விளம்பரத்துக்காக வெளியிடப்பட்டவை. கதை வித்தியாசமானது.
ஆனால் அதை இப்போது சொல்ல முடியாது. ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லும்போது அப்படியிப்படி சில வில்லங்கமான காட்சிகளைக் காட்டித்தான் ஆக வேண்டும்.
ஆழமான நட்பைச் சொல்லும் இக்கதையில் சென்டிமெண்ட் கமர்ஷியல் விஷயங்களும் உள்ளன. கிளைமாக்ஸ் காட்சி அதிரவைக்கும், என்கிறார் அன்பு.
முக்கால்வாசி படம் பார்த்த பிறகு கிளைமாக்ஸ் என்ன என்பதைச் சொல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்க உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











