twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. அசின்

    By Staff
    |

    Asin
    என்னிடம் பணம் பிடுங்குவதற்கு முத்துக்குமாரும் அவனது தாயாரும் நாடகம் ஆடுகிறார்கள் என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

    நடிகை அசினிடம் உதவியாளராக இருந்தவர், நல்ல முத்துக்குமார் (வயது 23). சில தினங்களுக்கு முன் இவர் மர்மமான முறையில் காணாமல் போய்விட்டார் என்றும், அசின் ரகசியங்கள் அவனுக்குத் தெரியும் என்பதால் அவனை எங்கோ மறைத்து வைத்துள்ளார்கள், எனவே உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்றும் அவரது தாயார் சுடலை வடிவு, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் கொடுத்தார்.

    இந்த புகார் மீது விசாரணை நடத்தும்படி, செங்குன்றம் போலீசாருக்கு புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். அதன்படி அசினிடமும், அவருடைய தந்தை ஜோசப்பிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி நடிகை அசின் கூறியுள்ளதாவது:

    நடிகர் விஜய்யிடம் முத்துக்குமார் வேலை செய்து வந்தான். அவன், என்னுடைய தீவிர ரசிகர் என்றும், என்னிடம் வேலை செய்ய விரும்புவதாகவும் போக்கிரி படப்பிடிப்பின்போது கூறினான். என் அப்பாவும் அவனை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

    என்னுடன் அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு வருவான். எனக்கு மதிய சாப்பாடு அவன்தான் கொண்டு வருவான். என் தந்தை, அவனை சொந்த மகன் மாதிரி பார்த்துக் கொண்டார்.

    எனக்கு இந்தி பட வாய்ப்புகள் வந்ததும், மும்பைக்கு வீட்டை மாற்றினோம். அப்போது, எனக்கு வேறு வேலை கிடைக்காது. நானும் உங்களுடன் வந்து விடுகிறேன் என்று முத்துக்குமார் கெஞ்சி கேட்டான். அய்யோ பாவம் என்று அவனையும் மும்பைக்கு அழைத்து வந்தோம்.

    ரூ.3 லட்சம் செலவில் சிகிச்சை..:

    அவனுக்கு தனியாக தங்கும் இடம் எடுத்துக்கொடுத்து, செல்போனும் வாங்கிக் கொடுத்தோம். சம்பளத்துடன், தங்கும் இடத்துக்கான வாடகை, செல்போன் செலவுகளையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார். என்னுடன் படப்பிடிப்புக்கு வருவதால், அவனுக்கு தினசரி பேட்டா கிடைத்தது. முத்துக்குமாருக்கு சம்பளத்தையும் சேர்த்து மாதம் ரூ.25,000 கிடைக்குமளவு செய்தோம்.

    நான் சென்னையில் இருந்தபோதே, அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்திருந்தேன். அவன் மும்பைக்கு வரும்போது, மோட்டார் சைக்கிளையும் கொண்டுவந்து விட்டான்.

    அந்த மோட்டார் சைக்கிளில் அவன் வெளியில் சென்றபோது, விபத்தில் சிக்கிக் கொண்டான். இரவு 10 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. அந்த இரவோடு இரவாக போய் அப்பா அவனை மருத்துவமனையில் சேர்த்தார். அவனுக்கு கால் எலும்பு முறிந்துவிட்டதாகவும், மூன்று ஆபரேஷன்கள் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள். எல்லா செலவுகளையும் அப்பாவே ஏற்றுக் கொண்டார். ரூ.3 லட்சம் செலவானது.

    முத்துக்குமாரின் அம்மாவை மும்பைக்கு வரவழைத்து, அவருக்கான செலவையும் நாங்களே ஏற்றுக்கொண்டோம்.

    இந் நிலையில் நான், 'லண்டன் ட்ரீம்' படப்பிடிப்புக்காக வெளிநாடு போய்விட்டேன். மீண்டும் நான் மும்பை திரும்பியபோது, முத்துக்குமாருக்கு கால் சரியாகி விட்டது. கொஞ்ச நாட்கள் அவனை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் கூறியிருந்தார்கள். ஓய்வுக்குப்பின் அவன் மீண்டும் எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தபோது, பரிதாபப்பட்டு சம்பள உயர்வு கூடக் கொடுத்தோம்.

    வியாபார திட்டம்!..:

    சில நாட்கள் கழித்து, சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் கேண்டீன் நடத்தும் வாய்ப்பு வந்திருப்பதாக, எனது அப்பாவிடம் முத்துக்குமார் கூறினான். அவன் ஆசைக்கு குறுக்கே நிற்க வேண்டாம் என்று அப்பாவும், அவனுடைய சம்பளத்தை செட்டில் செய்து அனுப்பி வைத்தார். எங்கள் வீட்டில் இருந்து சந்தோஷமாக புறப்பட்டு போனான்.

    மும்பையில் ஒரு சட்டம் இருக்கிறது. யாரையாவது வேலைக்கு சேர்த்தாலோ, அல்லது வேலையை விட்டு அனுப்பினாலோ, அதுபற்றி பக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அதன்படி, முத்துக்குமார் வேலையை விட்டு போனபோது, போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தோம்.

    ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினான்!..:

    பின்னர் நான் படப்பிடிப்புக்காக காஷ்மீர் போய்விட்டேன். அந்த சமயத்தில், முத்துக்குமாரின் அம்மா, மும்பையில் உள்ள எங்க வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரிடம்,'உன் மகன் வேலையை விட்டு போய்விட்டான் என்று அப்பா சொல்லியிருக்கிறார். உடனே அந்த அம்மா சென்னைக்கு திரும்பி விட்டார்.

    இந்த நிலையில், முத்துக்குமார் எனக்கு போன் செய்து, உடனடியாக ரூ.15 லட்சம் வேண்டும். கொடுக்காவிட்டால், நடப்பதே வேறு என்று மிரட்டினான். 'நீ எங்கே இருந்து பேசுகிறாய்?' என்று கேட்டதற்கு, சிவசேனா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகச் சொன்னான்.

    நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. சின்னப் பையன் என்று விட்டு விட்டோம். முத்துக்குமார், ஒரு செலவாளி. அவன் மாதம் ரூ.25,000 சம்பாதித்தாலும், பத்து பைசா கூட சேமித்து வைக்கவில்லை. நண்பர்களிடம் கடன் வாங்குவதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது. ஊரிலும் அவனுக்கு கடன் இருப்பதாக கேள்விப்பட்டோம்.

    அந்த கடன்களை அடைப்பதற்காகத்தான், எங்களை மிரட்டி இருக்கிறான். அவன் இருக்கும் இடம், அவனுடைய அம்மாவுக்கும் தெரியும். இரண்டு பேரும் சேர்ந்து, பணத்துக்காக நாடகம் நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார் அசின்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X