மோகன்லால்-திலீப் ரசிகர்கள் மோதல்!

மலையாள நடிகர் சங்கம் அம்மா, நலிந்த கலைஞர்கள் மேம்பாட்டுக்காகத் தயாரித்த படம் ட்வென்டி:20. அம்மா சார்பில் இதைத் தயாரித்தவர் திலீப்.
மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி என மலையாள முன்னணி நடிகர்கள் அனைவரும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் திலீப்பும் முக்கிய வேடத்திலும் நடித்தார்.
படம் வெளியானபோது அதன் விளம்பரங்களில் மம்முட்டிக்கு முக்கியத்துவம் தந்து, மோகன்லால் புறக்கணிக்கப்படுவதாக அவரது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். இதனால் மோகன்லாலுக்கென்று தனி விளம்பரம் செய்யப்பட்டது.
அதன் பிறகு படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு கட்டணம் உயர்த்தியதை எதிர்த்து மோகன்லால் ரசிகர்கள் படத்தைப் புறக்கணித்தனர். மோகன்லாலுக்கு எதிராக திலீப் செயல்படுவதாகவும் கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் ஸ்ரீகுமார் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த திலீப்பின் கட்-அவுட் மற்றும் சுவரொட்டிகளை மோகன்லால் ரசிகர்கள் சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் தம்பானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது மோகன்லாலின் ரசிகர் மன்றத் தலைவர் விமலின் வேலைதான் என கூறப்படுகிறது.
காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் மோகன்லாலுக்கு தெரியாமல் அவரது விமல் தன்னிச்சையாக இந்த வேலையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து கேரளா திரும்பும் மோகன்லால் கடும் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











