ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு ஒஸ்தி படக்குழு பரிசு
ப்ளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிம்பு நடிக்கும் ஒஸ்தி படக்குழு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு ப்ளஸ் டூ மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்புகளுக்கு நடந்த பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒஸ்தி படக் குழு சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்போவதாக அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இதற்கான விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் ப்ளஸி டூவில் அதிக மதிப்பெண் பெற்ற ஓசூர் மாணவி கே. ரேகாவுக்கு ரூ 1 லட்சம் பரிசளிக்கப்பட்டது. இவர் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்.
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற செய்யாறு அரசுப் பள்ளி மாணவி மின்னலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி எம் நித்யா, கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ரம்யா, சேலம் சங்கீதா, திருவெற்றியூர் ஹரிணி ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ 20 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசுகளை நடிகர் சிம்பு வழங்கினார். விழாவில் இயக்குநர் தரணி, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











