ராகவேந்திரா மண்டபம் மீது கல்வீச்சு என வதந்தி!

ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் மாஸ்டர் அஜீத் விவகாரத்தில் கிளப்பியுள்ள பிரச்சனையில் தேவையின்றி ரஜினி பெயர் இழுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிலர் ஜாகுவார் தங்கம் வீடு மீது கல்வீசியதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஜாகுவாரின் ஆட்கள் சிலர் கல் வீசி தாக்குவதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து அங்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
ராகவேந்திரா மண்டப நிர்வாகி சுதாகரிடம் இதுபற்றி கேட்டபோது, 'கல்வீச்சு, கலாட்டா என எந்த சம்பவமும் நடக்கவில்லை. தேவையில்லாத பிரச்சனை வேண்டாம்' என்றார். ரசிகர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பினார்.
அப்போது அங்கு கூடியிருந்த ரஜினி ரசிகர்கள் கூறியதாவது:
நடிகர் அஜீத்குமார் விழா ஒன்றில், நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்க கூடாது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு எங்கள் தலைவரும் ஆதரவு தெரிவித்தார்.
ஆனால் இந்த கருத்தை ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மொழி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் திரித்து பிரச்சனையை திசை திருப்பி வருகிறார். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் தலைவர் தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் வாழக் கூடியவர்... எதிரிக்கும் அன்பு காட்டுபவர். அவரை இப்படியெல்லாம் பேச இந்த நபர்களுக்கு நாக்கு கூசவில்லையா? தன் தொழிலில், தன் சமூக சேவையில் மட்டும் கவனம் செலுத்தி நல்ல தமிழராக வாழும் எங்கள் தலைவரை தேவையின்றி சீண்டினால் இனியும் சும்மா இருக்க மாட்டோம் என்றனர் ஆவேசத்துடன்.


Click it and Unblock the Notifications











