அமிதாப் நிகழ்ச்சியில் ஜார்கண்ட் பெண்ணுக்கு ரூ 1 கோடி பரிசு!

சோனி இந்தி தொலைக்காட்சியில் குரோர்பதி-4 என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார் அமிதாப்.
சில தினங்கள் முன்பாகவே ஷூட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. இதில் நாட்டிலேயே முதல் முறையாக 37 வயது பெண் ராகத் ரூ.1 கோடி பரிசு பெற்றுள்ளார். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிக் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர்.
அவர் ஆரம்பத்தில் லைப் லைன்களை பயன் படுத்தி ரூ.3.20 லட்சம் பரிசுக்கு முன்னேறினார். அதன் பிறகு ரூ.50 லட்சம் வரை லைப்லைன்களை பயன் படுத்தாமல் முன்னேறி இருக்கிறார்.
இது குறித்து ராகத் கூறுகையில், "அமிதாப்பச்சனின் குரோர்பதி நிகழ்ச்சியில், ரூ.1 கோடி பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமை எனக்கு கிடைத்து இருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அமிதாப்பின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் நம்பிக்கையுடனும் சொந்த முயற்சியிலும் பதில் அளித்தேன்," என்றார்.
அவர் பம்பர் பரிசான ரூ.5 கோடியை நெருங்கிய போது, "முதன் முதலில் இருதய மாற்று சிகிச்சை எங்கு நடந்தது" என்ற கேள்வியை அமிதாப்பச்சன் கேட்டார். அதற்கு ராகத்துக்கு பதில் தெரியவில்லை. ரூ.1 கோடி வென்றதுடன் அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி ராகத்துக்கு குரோர்பதியில் பங்கேற்க அழைப்பு வந்தது. போட்டியில் பங்கேற்க இவரிடம் வங்கி கணக்கும், வருமான வரி கணக்கு எண்ணும் வேண்டும் என்று கேட்டனர். அதன் பிறகு சொந்த ஊர் திரும்பி வங்கியில் கணக்கு தொடங்கினார். வருமான வரி கணக்கு எண் கேட்டும் விண்ணப்பித்தார். அவை கிடைத்த பின்பு நவம்பர் 1-ந் தேதி அவர் குரோர்பதியில் பங்கேற்க தேர்வானார்.
கடந்த 8-ந் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. நேற்று முன்தினம் (18-ந் தேதி) நிகழ்ச்சி ஒளிபரப்பானது.


Click it and Unblock the Notifications











