twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இலங்கைக்கு வரவும் தயங்க மாட்டோம்'-திரையுலகம் ஆவேசம்

    By Staff
    |

    Vairamuthu
    ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழர் படுகொலையைத் தடுக்காவிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும். இல்லாவிட்டால், ராமேஸ்வரம் வரை வந்தவர்கள் இலங்கைக்கு வரவும் தயங்க மாட்டோம், என இலங்கை அரசுக்கு தமிழ் திரை உலகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திரை உலக தமிழ் இன உணர்வு குழு சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் நேற்று மாலை பிரமாண்ட பேரணி நடந்தது. பின்னர் மாலையில் ராமேஸ்வரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிழகாடு மைதானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் பேசியோர் கூறியதாவது:

    கவிஞர் வைரமுத்து:

    இலங்கை நமது மண். நமது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். இலங்கையிலும், மதுரையிலும் உள்ள படிக பாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானவைதான் என்று தெரியவந்தது.

    நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22ம் தேதி நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

    எங்கள் தமிழ் குலப் பெண்களை சிவகாசி பட்டாசுபோல வெடிவைத்து கொல்கிறது சிங்கள ராணுவம். அங்கு சிறுவர்கள், சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது.

    கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அனாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார் ராஜபக்சே. அதற்காக உங்கள் ஓட்டுபெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா?.

    இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ராடார் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில் நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது ராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். இதனை உடனே நிறுத்துங்கள்.

    தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும்.

    தனது ஒட்டுமொத்த பொது வாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதல்வரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

    வடிவேலு:

    நமது கோபம் எல்லாம் நமது நடிகர்களை நோக்கி போய்விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. நமது கோபத்தை அவர்கள் மீது காட்ட வேண்டியதே இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ் ஈழத்தினர் படும் துயரங்களை இன்டர்நெட் மூலம் வீடியோவில் பார்த்தேன். அதில் பெண்களின் மார்பகத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் எலும்புக் கூடுகளாக ஆக்கப்படுகிறார்கள். தயவு செய்து இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுங்கள்.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் போய் வேறு மாநிலத்தவர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். வீட்டுக்குள் வேறு மொழியை பேசும் அவர்கள் இந்த தமிழனின் வீட்டு மேலேயே கல்லைக்கொண்டு அடிக்கிறார்கள். அந்த விஷயம் வேறு. ஈழத்தில் மடிந்துள்ள தமிழர்கள் சாகவில்லை. விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் புலியாக உருவெடுப்பார்கள்.

    ராம.நாராயணன்:

    ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்று இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி சூட்டினால் பாதிக்கப்படும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஆம்புலன்சு வசதிகேட்டு பாம்பன் ஊராட்சி தலைவர் அனிபா மனு கொடுத்துள்ளார்.

    அனைத்து சங்கங்களின் ஒப்புதலுடன் அதனை நிறைவேற்றுவோம். அகதிகளாக வந்தவர்களுக்கு ரூ.6 லட்சம் செலவில் வேட்டி-சேலைகளை வழங்கினோம். தொடர்ந்து இதுபோலவே அவர்களுடன் இணைந்திருப்போம். அவர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது அண்ணன்-தம்பி உறவு. இது உணர்ச்சி உள்ளவர்களின் உரிமைகாக்கும் போராட்டம். நல்லவன் போல் நடிக்கும் ராஜபக்சேவின் நடவடிக்கைகளை பொறுக்கமாட்டோம், பொங்கி எழுவோம்.

    விஜய டி.ராஜேந்தர்:

    இன உணர்வு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து தமிழர்களை அழிக்கும் ராஜபக்சேவை நாம் வீழ்த்த வேண்டும். நான் சொல்வதற்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாரும் வருத்தப்படக்கூடாது. ராமேஸ்வரத்துக்கு இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நான் நடிகனாக வரவில்லை. ஒரு தமிழனாக வந்தேன்.

    சிலர் வரவில்லை என்று எனக்கு ஒருபுறம் ஆதங்கம். மறுபுறம் ஆனந்தம். இது தமிழர் படை. சிலரின் கேள்விக்கு இதுதான் விடை. தமிழினமே ராமேசுவரம் கடல் அலையாய் எழும்பினால் தாங்காது உங்கள் பூமி. அனைத்து கட்சி கூட்டத்துக்கு சிலர் போகவில்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கு சென்று ஆதங்கப்பட்டு தலைமை எதிர்ப்பாளர் என்று முதல்வர் சொல்லும் வகையில் நான் பேசினேன்.

    சில நடிகர்கள் இங்கு வரவில்லை. பாதுகாப்பு இருக்காது என்று கூறுகிறார்கள். அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். உன் மக்களிடமே பாதுகாப்பு கேட்டால் நீ ஹீரோவா? இல்லை ஜீரோவா? .

    மராட்டியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், குஜராத்தியர் உள்பட யாரை அடித்தாலும் அந்த மாநில மக்கள் பொங்கி எழுகிறார்கள். ஆனால் தமிழர்களை அடித்தால் இங்குள்ளவர்கள் பேசாமல் இருக்கிறார்கள்.

    மனித சங்கிலி போதாது. ஆட்சியை இழந்தாலும் பரவாயில்லை. உங்கள் காலத்தில் தமிழ் ஈழம் பிறக்க வேண்டும்.

    கே.எஸ்.ரவிக்குமார்:

    இலங்கையில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும், நியாயம் கேட்கவும் நாம் இங்கு வந்துள்ளோம். மேலும் பாதிக்கப்படும் நம் தமிழ் மக்களுக்கு உணர்வுபூர்வமாக ஆறுதல் கூறவும் கூடி உள்ளோம்.

    தமிழர்களான உங்களுக்கு காயம் ஏற்படுத்தும் அரசு நீடிக்காது. உங்கள் காயங்களை ஆற்றும் பணிகள் விரைவாக நடக்கிறது. எதிரிகளே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகம் ராமேசுவரத்தின் கரையை நிச்சயம் தாண்டும்.

    சேரன்:

    ஈழத்தில் 30 வருடமாக தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனை நமது வீட்டில் நடக்கும் பிரச்சினையாக, சகோதரத்துவத்துடன் பார்த்திருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்து இருக்கும். ஆனால் அப்படியாரும் பார்க்கவில்லை.

    ஒரு தீவில் 44 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை விடுவிக்க இந்திய அரசு ராணுவத்தையே அனுப்பி வைக்கிறது.

    ஆனால் நமது பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் பிரச்சினையில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க அரசு மறுக்கிறது. தமிழ் ஈழத்தை பற்றி இயக்குனர்களாகிய நாங்களோ, அரசியல்வாதிகளோ பேசுவதால் எந்த முடிவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நடிகனும் தங்களது ரசிகர்கள் மன்றம் மூலம் ஈழத்தில் தமிழர்கள் படும் துன்பங்களை ஐ.நா.சபைக்கு தந்தியாக அனுப்ப வேண்டும்.

    சீமான்:

    இந்த கூட்டத்தை ராமேசுவரத்தில் ஏன் நடத்துகிறோம் என்றால், இங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கைக்கு நாம் செல்வது பெரிய விஷயமல்ல என்று சிங்கள வெறியர் ராஜபக்சேவுக்கு தெரியப்படுத்தவே.

    இங்குள்ள 6 கோடி தமிழர்களும் கடல்தாண்டி வருவார்கள். பர்மாவில் தமிழனை அடித்தார்கள். பம்பாயில் தமிழனை அடித்தார்கள். மலேசியாவில் தமிழனை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தமிழர்களை அடித்தார்கள். ஆனால் நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழ் ஈழ மண்தான். அதை எப்படி நாம் வன்முறை என்று சொல்ல முடியும்?

    இந்தியாவில் தமிழர்களோ, கன்னடர்களோ பிரதமராகலாம் என அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர் ஒருபோதும் அதிபர் ஆக முடியாது. ஏனெனில் ஈழத் தமிழர் அதிபராவதற்கு அந்த நாட்டு சட்டத்தில் இடம் இல்லை. உலகத்தில் உள்ள அனைத்து நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை.

    ஈழத் தமிழனை வேரோடு அழித்து விடலாம் என்று இலங்கை அரசு நினைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் அது நடக்காது.

    தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. அங்கு போக்குவரத்து துறை, தொழில் துறை, மருத்துவத் துறை என அனைத்து துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு எல்லை விரிவாக்கமும், சர்வதேச அங்கீகாரம்தான் கிடைக்க வேண்டும்.

    சர்வதேச அங்கீகாரம் கிடைக்க உலகில் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். புரட்சி வெல்லும். தமிழ் ஈழம் வெல்லும்.

    ஆர்.கே.செல்வமணி:

    பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங்குக்காக நமது நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள். ஆனால் தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதை பற்றி இந்திய அரசு கேட்க மறுக்கிறது.

    நமக்கு துரோகம் செய்பவர்கள் வெளியில் இல்லை. நம்முடன் இருந்து கொண்டே நமக்கு துரோகம் செய்து விட்டார்கள்.

    அமீர்:

    இந்த மேடையில் ஒலிக்கும் குரல் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மரண ஓலமாக கேட்கட்டும். அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதி அளிக்கட்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்து வெடிசத்தம் கேட்கிறது. அங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாக செல்கிறார்கள்.

    இலங்கை தமிழர்களின் பிரச்சினை இந்துக்களின் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை, கிறிஸ்தவர்களின் பிரச்சினை என்று பேதம் பிரித்து பார்க்காமல் அனைவரும் இதற்கு ஆதரவாக வரவேண்டும். நமது எதிரி நாடான பாகிஸ்தான்கூட நமது மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து 4 எம்.பி.க்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் வேண்டாமா? நம்மிடம் குரல் கொடுத்து பேசும் தலைவர்களே இல்லை. வாருங்கள் என்றால் யாரும் வருவதும் இல்லை. ஒரு பிரச்சினை தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்தில் கூட சிலர் அழைத்தாலும் வருவதில்லை. ஒரு மாநில முதல்வர் அழைத்தாலும்கூட அவர்கள் அதனை ஏற்பது இல்லை. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்ற முடியும்? அவர்களை திட்டி பிரயோஜனம் இல்லை.

    எங்களை ஆளும் நீங்கள் அதனை சரி செய்யுங்கள். உங்களால்தான் கேட்க முடியும். இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதாக அரசு அறிவித்தால் உலகம் இந்த பிரச்சினையில் தலையிடும்... அதன்பின் உரிய தீர்வு கிடைக்கும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X