மோனிகாவின் 'அ ஆ இ ஈ'!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவி.எம். குமரன் தயாரிப்புக்குத் திரும்பியுள்ள படம்தான் அ ஆ இ ஈ.
இவர் ஏற்கனவே சூரக்கோட்டை சிங்கக்குட்டி, நாம் இருவர், வெள்ளைப் புறா ஒன்று ஆகிய 3 படங்களை ஏவி.எம் பேனரில் தயாரித்துள்ளார். 3 படங்களுமே தோல்விப் படங்களானதால் தயாரிப்புக்கு விடை கொடுத்து விட்டு டிவி சீரியல் பக்கம் திரும்பினார்.
இந்த நிலையில் தனது மகன் ஏவிஎம்கே சண்முகத்துடன் இணைந்து மீண்டும் திரைப்படத் தயாரிப்புக்குத் திரும்பியுள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறு தயாரிப்புக்கு வந்துள்ள குமரன், தெலுங்கில் ஹிட் ஆன சந்தமாமாவை ரீமேக் செய்கிறார்.
அ ஆ இ ஈ என இப்படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நவ்தீப், மோனிகா இணைந்து நடிக்கவுள்ளனர். அழகிய நடிகராக இருந்தும் நவ்தீப் பிரேக் இல்லாமல் சிரமப்படுகிறார். மோனிகாவும் இப்போதுதான் தனி நாயகியாகியுள்ளார். எனவே இருவரும் இப்படத்தை தங்களை உயர்த்தும் ஏணியாக கருதி கலக்கலாக நடிக்கவுள்ளனர்.
இவர்கள் தவிர பிரபு, மனோரமா, வி.எம்.சி. ஹனீபா, லிவிங்ஸ்டன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் படத்தில் இடம் பெறுகின்றனர்.
படத்தை சபாபதி இயக்கவுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அடுத்து தென்காசி, தேவகோட்டை என கிளம்பவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











