புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
லண்டன் வாழ் தமிழர் மூலம் விடுதலைப் புலிகளின் பணம் தமிழ்த் திரைப்படங்களில் முதலீடு செய்யப்பட்டதென்றும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்துக்கும் இந்தத் தொகை தரப்பட்டதென்றும் இலங்கை அமைச்சர் பதியுதீன் பேட்டியளித்தது பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது.
இந்தக் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் கருத்து கூறியிருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி இது குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில், அவருக்காக தமிழ்த் திரையுலகமே ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது.
பட அதிபர் ராம நாராயணனன், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், சன்டிவி நிர்வாகி சக்ஸேனா என ஏராளமானோர் இலங்கை அமைச்சர் கூறியது வடிகட்டிய பொய் என்றும் முட்டாள்தனமானது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள லண்டன் தமிழ் பட நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் என ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் சார்பில் அதன் பிஆர்ஓ டயமண்ட் பாபு தட்ஸ் தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது:
"விடுதலைப் புலிகளுக்கும் ஐங்கரன் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னொன்று எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவில்லை. தயாரிக்காத ஒரு படம் குறித்தும், கொடுக்கப்படாத தொகை குறித்தும் எங்கள் நிறுவனத்தை வம்புக்கிழுத்திருப்பது தேவையற்றது, கண்டிக்கத்தக்கது..." என்றார் டயமண்ட் பாபு.


Click it and Unblock the Notifications











