கருணாநிதியின் 'இளைஞன்' படத்துக்காக ரூ 3 கோடியில் பிரமாண்ட கப்பல்!

ஆனால் இடம் வங்கக் கடல் அல்ல... பெரம்பூர் பின்னி மில்ஸ் வளாகம். பின்னி மில்லில் கப்பலா என்கிறீர்களா... இது சினிமா கப்பல். முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதும் 75வது படமான இளைஞனுக்காக தோட்டாதரணி போட்டுள்ள அசத்தல் செட்.
பெயர்தான் செட்டே தவிர, உள்ளே போய் பார்த்தால், 1000 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் தங்கலாம்... அத்தனை வசதிகள், பிரமாண்டம்!
இந்த படத்தில் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். நமீதா வில்லியாகவும், குஷ்பு அம்மா வேடத்திலும் நடிக்கிறார்கள். சுரேஷ்கிருஷ்ணா இயக்க, மார்ட்டின் தயாரிக்கிறார்.
எதற்காக இந்த கப்பல் செட்?
படத்தின் ஹீரோ பா விஜய் கூறுகையில், "இந்தியாவிலேயே முதல் முறையாக கப்பல் கட்டும் தொழிற்சாலையொன்றை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இளைஞன்.
இது, ஒரு வரலாற்று படம். சென்னையை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் 1959-60-ல் சம்பவங்கள் நிகழ்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கப்பல். ரூ 3 கோடி வரை செலவானது. இதை நிஜமான கப்பல் கட்டும் தொழிற்சாலையி்லேயே கூட எடுத்திருக்கலாம். ஆனால் 1950களில் இருந்த சூழல் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செட். இதைக் காண இப்போது மக்கள் ஏராளமாக வருவதால், இன்னும் ஒரு வாரம் கழித்துதான் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம்..." என்றார்.
சுரேஷ்கிருஷ்ணா இயக்கும் 50 வது படம் இது.


Click it and Unblock the Notifications











