நான் கடவுள் ஓவர்!

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நான் கடவுளை இயக்கி வருகிறார் பாலா. முதலில் ஹீரோயினால் தாமதம் ஏற்பட்டது. பல ஹீரோயின்களை புக் செய்து நடிக்க வைத்து, திருப்தி வராமல் மாற்றிக் கொண்டிருந்த பாலா, இறுதியில் பூஜாவை வைத்து படத்தை முடித்தார்.
இப்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. இதையடுத்து ஆர்யாவை, விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்திற்கு வழியனுப்பி வைத்துள்ளார் பாலா. இதனால் நான் கடவுளுக்காக வளர்த்து வந்த தாடியை எடுத்து விட்டு ஸ்லிம் ஆகியுள்ளார் ஆர்யா.
ஆர்யாவிடம் ஒரே ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம் பாலா. அது, நான் கடவுள் படம் குறித்து எந்தத் தகவலையும் யாரிடமும் சொல்லக் கூடாது. குடும்பத்தினரிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அன்போடு கேட்டுக் கொண்டுள்ளாராம் பாலா.
படப்பிடிப்பு முடிவடைந்து, ஷூட்டிங்கிற்குப் பிந்தைய வேலைகள் பிரசாத் ஸ்டுடியோவில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நான் கடவுள் குறித்து சில தகவல்களை மட்டும் ஒரு வார இதழிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் பாலா.
ஆனால் ஏற்கனவே தட்ஸ்தமிழ், நான் கடவுள் படத்தின் முக்கிய கருத்து குறித்த சில முக்கியத் தகவல்களை நமது நேயர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. சில சாதுக்களின் கோரமான மறுபக்கத்தைக் காட்டும் படம் இது என்று நாம் முன்பே கூறியிருந்தோம். அதை தனது பேட்டியில் ஒத்துக் கொண்டுள்ளார் பாலாவும். நர மாமிசம் சாப்பிடும் சாதுக்கள் குறித்தும் தனது படத்தில் தத்ரூபமான காட்சிகளை வைத்துள்ளார் பாலா. இதையும் நாம் முன்பே கூறியிருந்தோம்.
தனது பேட்டியில் பாலா கூறுகையில், மோசமான சில சாமியார்களின் மறுபக்கத்தை எனது படத்தில் தோலுரித்திக் காட்டியுள்ளேன். இன்னும் கூட நரமாமிசம் சாப்பிடுவோர் இருக்கிறார்கள். கங்கைக் கரையின் ஓரத்தில் காண முடியும். அதுதவிர மேலும் சில புனிதமான தலங்களிலும் நர மாமிசம் சாப்பிடும் சாமியார்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் பாலா.
நான் கடவுள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பூஜாவின் இறந்த உடலை சாதுவான ஆர்யா சாப்பிடுவது போல காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சென்சார் கத்திரிக் கோலில் இது சிக்கி விடுமோ என்ற அச்சத்தில், வேறு மாதிரியான ஒரு கிளைமாக்ஸையும் தற்காப்பாக எடுத்து வைத்துள்ளாராம் பாலா.


Click it and Unblock the Notifications