சிரஞ்சீவிக்கு எதிராக இறக்கப்படும் ஜூனியர் என்.டி.ஆர்

By Staff

Junior NTR
ஹைதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் பேரனும், பிரபல தெலுங்கு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு தேசம் கட்சிக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சிரஞ்சீவியை சமாளிக்க ஏற்கனவே ராமாராவின் மகன் பாலக்ரிஷ்ணாவை கட்சிக்குள் இழுத்துவிட்டார் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு.

ஆனால், பாலகிருஷ்ணாவின் பலம் மட்டும் போதாது என்பதால் இப்போது பெரும் இளைஞர் பட்டாளத்தை தன் வசம் வைத்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆரையும் இழுத்துள்ளார் நாயுடு.

நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையாக முயற்சித்து, ஜூனியர் என்.டி.ஆரை. தீவிர அரசியலுக்கு இழுத்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சிக்காக தீவிரப் பிரசாரம் செய்ய ஜூனியர் என்.டி.ஆரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

ஜனவரி மாதம் முதல் ஜூனியர் என்.டி.ஆரின் பிரசாரம் தொடங்குகிறது.

25 வயதே ஆகும் ஜூனியர் என்.டி.ஆர். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். சிரஞ்சீவிக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்பதால் அவரை கஷ்டப்பட்டு பிரசாரத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளது தெலுங்கு தேசம்.

சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியைப் பார்த்து தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கிலியடித்துப் போயுள்ளன.

இதனால் சிரஞ்சீவிக்கு ஈடு கட்டும் வகையில் நடிகர்கள் நாகார்ஜூனா, கிருஷ்ணா, அவரது மகன் மகேஷ்பாபு ஆகியோரை காங்கிரஸ் கட்சி தனது பிரசார வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

இந் நிலையில் தான் ஜூனியர் என்.டி.ஆரை பெரும்பாடு பட்டு தனக்கு ஆதரவாக திருப்பியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

குடும்பத்தில் விரிசல்?:

இதற்கிடையே, ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஹரிகிருஷ்ணா மற்றும் சித்தப்பா நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோருக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நாயுடுவை ஹரிகிருஷ்ணாவும், பாலகிருஷ்ணாவும் சந்தித்துப் பேசினர். அப்போது தெலுங்கு தேசம் கட்சிக்காக இணைந்து பிரசாரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார் நாயுடு. அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

இருப்பினும் குண்டூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யுவ கர்ஜனை கூட்டத்திற்கு இருவரும் கடைசி நேரத்தில் வராமல் இருந்து விட்டனர். இதனால் நாயுடு அப்செட் ஆகி விட்டார். குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதையே இது காட்டுவதாக கூறப்பட்டது.

இதற்குப் பின்னணியாக 'சீட்' பிரச்சினை கூறப்படுகிறது. கண்ணாவரம் சட்டமன்றத் தொகுதியை தனது நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான வல்லபேனி வம்சிமோகனுக்குத் தர வேண்டும் என கூறியுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

ஆனால் அவரது தந்தை ஹரிகிருஷ்ணாவோ அந்தத் தொகுதியை முன்னாள் எம்.எல்.ஏ தாசரி பாலவர்த்தன் ராவுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் ஜூனியர் என்.டி.ஆர். அப்செட் ஆகி விட்டார் என்கிறார்கள்.

ஹரிகிருஷ்ணாவின் 2வது மனைவிக்குப் பிறந்தவர்தான் ஜூனியர் என்.டி.ஆர். என்.டி.ஆர். குடும்பத்தினர் இன்னும் ஜூனியர் என்.டி.ஆரின் தாயாரை அங்கீகரிக்கவில்லை. இதுவும் ஜூனியர் என்.டி.ஆர். மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இந் நிலையில்தான் என்.டி.ஆரின் மகளும், மத்திய அமைச்சருமான புரந்தரேஸ்வரியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும், ஜூனியர் என்.டி.ஆரை காங்கிரஸ் பக்கம் இழுக்க முயற்சிக்கும் தகவல் நாயுடுவை எட்டியது.

இதனால் பீதியடைந்த நாயுடு, புதன்கிழமை ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து, கண்ணாவரம் தொகுதி நீ சொல்லும் நபருக்கே கிடைக்கும். அதற்கு நான் கியாரண்டி என்று சமாதானப்படுத்தியுள்ளார். இதையடுத்தே தெலுங்கு தேசத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர். பிரசாரம் செய்ய சம்மதம் தெரிவித்தாராம்.

ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சிக்காக ரோட் ஷோக்களை நடத்தப் போகிறாராம் ஜூனியர் என்.டி.ஆர். இருப்பினும் தனிப்பட்ட முறையில் பிற கட்சிகளைச் சேர்ந்த நடிகர்களையோ அல்லது பிற தலைவர்களையோ விமர்சித்துப் பேச மாட்டேன் என நிபந்தனையும் போட்டுள்ளாராம்.

திரைத் துறையில் இப்போதுதான் அவர் உச்சத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர்களையோ அல்லது சக நடிகர்களையோ பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தாத்தா என்.டி.ஆரின் கட்சி தெலுங்கு தேசம். அதற்கு வாக்களியுங்கள், மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துங்கள் என்று மட்டும் பொத்தாம் பொதுவாக பிரசாரம் செய்வாராம்.

அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் லோக்சபாவுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரஞ்சீவிக்கு எதிராக போட்டி: ரோஜா

இதற்கிடையே, சிரஞ்சீவி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட நான் தயார் என நடிகையும், தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியுமான ரோஜா சூளுரைத்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு தேசத்திற்கு சிரஞ்சீவியால் கொஞ்சம் கூட பாதிப்பில்லை. சிரஞ்சீவி போகும் இடமெல்லாம் வரும் கூட்டம், அப்படியே அவருக்கு ஓட்டுப் போடும் என கூற முடியாது.

சிரஞ்சீவியை எதிர்த்த நான் போட்டியிடத் தயார். கட்சி கட்டளையிட்டால் நிச்சயம் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றார் ரோஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X