எங்களிடம் ரூ.15 லட்சம் பணம் கேட்டார் நல்ல முத்துகுமார்! - ஆசின் தந்தை

நடிகை ஆசினிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் முத்துகுமார். இவர் மும்பையில் திடீரென்று மாயமானார். தனது மகனை ஆசின் மறைத்து வைத்திருப்பதாக தாயார் சுடலைவடிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை மறுத்த நடிகை ஆசின், என்னிடம் இருந்து முத்துகுமார் வேலையை விட்டு விலகி நீண்ட நாட்களாகி விட்டது என்று தெரிவித்து இருந்தார். மேலும் எங்களிடம் 15 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டினான் என்றும் அவரது தரப்பில் புகார் கூறப்பட்டது. முத்துகுமார் எங்கிருக்கிறார், அவர் என்னவானார் என்பது இதுவரை தெரியவில்லை.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து மாயமான முத்துகுமாரை கண்டுபிடிப்பதற்காக மும்பை சென்றுள்ளனர்.
இதனிடையே, நல்லமுத்துக்குமார் தங்களிடம் போனில் ரூ.15 லட்சம் கேட்டது எதற்காக என்று நடிகை ஆசினின் தந்தை ஜோசப் தெரிவித்துள்ளார்.
முத்துக்குமார் மிகவும் நல்ல பையன்தான் என்றும், அவனை நாங்களாக வேலையை விட்டு நிறுத்தவில்லை, தானாகத்தான் நின்றான் என்றும் ஜோசப் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நல்ல முத்துக்குமார் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் கேண்டீன் எடுத்து நடத்தப் போவதாக கூறி வேலையில் இருந்து நின்றுவிட்டான். சில நாட்கள் கழித்து கேண்டீன் நடத்துவதற்கு 15 லட்ச ரூபாய் பணம் கேட்டான். மீண்டும் சிறிது நாட்கள் கழித்து எங்களிடம் போனில் பேசினான். அப்போது, தெரியாமல் பணம் கேட்டுவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினான்.
யாரோ தூண்டி விட்டுத்தான் அவன், இப்படி பேசியிருக்கிறான். அவன் அப்படியெல்லாம் பேசக்கூடிய ஆள் அல்ல. அவன் ஒவ்வொரு முறை பேசும்போதும் ஒவ்வொரு போன் நம்பரில் இருந்து பேசினான்.
அனேகமாக அவனுக்கு நிறைய கடன் இருக்கலாம் என்று நினைக்கிறோம். அதனால்தான் அவ்வளவு பணம் கேட்டுள்ளான். போலீசார்தான் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் ஜோசப்.
சுடலைவடிவு மறுப்பு
ஆனால் நல்லமுத்துக்குமார் தாயார் சுடலைவடிவு இதை மறுத்துள்ளார்.
சென்னையில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்கு நண்பர்களுடன் வேலைக்கு சென்று வந்தான்.
இந்த நேரத்தில்தான் முத்துகுமாரை எனது கணவர், மதுரையை சேர்ந்த தனது நண்பரும், இயக்குனருமான ஒருவரது அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையால் நடிகர் விஜயின் அலுவலத்தில் வேலைக்கு சேர்த்து கொண்டார்கள்.
யாரும் அவனை குறை சொல்ல முடியாது. அந்த அளவிற்கு நல்லபெயர் எடுப்பான். அவனுக்கு என் கணவரைப்போல் போலீசில் சேரவேண்டும் என்பதுதான் ஆசை. போலீஸ் வேலையில் சேரும் முன்பாக சிறிது நாள் வேறு வேலை ஏதாவது பார்த்தால் நன்றாக இருக்குமே என்றுதான் அவன் இந்த வேலைகளில் சேர்ந்தான்.
ஆசின் பெற்றோர் கூறுவதைப்போல் என் மகனுக்கு கேண்டீன் வைத்து நடத்தவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. எங்களுக்கு ஒரே மகள் இருக்கிறாள். அவளை 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.
அந்த திருமணத்துக்காக வாங்கிய கடன்தான் இருந்தது. அதையும் கூட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அடைத்து விட்டோம். பணம் கேட்கும் அளவிற்கு என் மகனுக்கோ எங்களுக்கோ எந்த கடனும் கிடையாது, என்றார் சுடலைவடிவு.


Click it and Unblock the Notifications