கடன்- பங்களாவை விற்ற சரண்!

'சினிமாவுல நல்லா வளர்ற நேரத்துல ஒருத்தன கவுக்கணுமா, சொந்தப் படம் எடுக்கச் சொல்லி ஆசை காட்டு...' என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. பல இயக்குநர்கள், நடிகர்கள் விஷயத்தில் இது உண்மையென்றே நிரூபணமாகியிருக்கிறது. ரொம்ப அரிதான சில விதிவிலக்குகளும் உண்டு.
ஓஹோ என்று வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஜெமினி புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் புதிதாக படக் கம்பெனி ஆரம்பித்து மூன்று படங்கள் தயாரித்தார் இயக்குநர் சரண்.
இந்த மூன்றில் சூர்யா நடித்து, ஹரி இயக்கிய ஆறு மட்டும் முதலுக்கு மோசமில்லாமல் போனது. அடுத்த இரு படங்களான முனியும் வட்டாரமும் சரணை பெரும் கடனாளியாக்கிவிட்டன.
போதாக்குறைக்கு தயாரிப்பு நிறுவனத்தில் பார்ட்னராக இருந்த அவரது நண்பர் மோகன மகேந்திரனும் மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றி விட்டாராம். இதுகுறித்து, சமீபத்தில் போலீசில் சரண் புகார் கொடுத்திருப்பது தெரிந்ததே.
இன்னொரு பக்கம் கமல் நடிப்பில் சொந்தப் படம் தயாரிக்கத் திட்டமிட்டு, இரண்டு கோடி ரூபாயை கமலுக்கு அட்வான்ஸாகவும் சரண் கொடுத்திருந்தார். ஆனால் கமலிடம் சொல்லாமல் திடீரென தயாரிப்பாளரை மாற்ற சரண் திட்டமிட்டதால் கமல் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.
இப்படி அடிமேல் அடி விழுந்ததில், சரணுக்கு ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ரூ. 6 கோடிக்கும் மேல் என்கிறார்கள்.
கேரியரில் சறுக்கல், நிம்மதியின்மை எனத் தவித்த சரண் கடைசியில் தான் ஆசை ஆசையாய் வாங்கிய ஆழ்வார்பேட்டை பங்களாவை விற்றுவிட்டாராம்.
கடன் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதோடு, படத் தயாரிப்புக்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாராம்.
கடன் தொல்லை தீர்ந்த நிம்மதியில் புதிதாக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிவிட்டாராம். இதைக் கேட்ட மெட்ரோ பிலிம்ஸ் நிறுவனத்தினர் உடனடியாக, பிடிங்க அட்வான்ஸ் என்று ஒரு பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்கள் சரணுக்கு.
உன்னாலே உன்னாலே பட நாயகன் வினய்யை வைத்து இப்படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டார் சரண். கமலும், தான் சரணிடம் வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறிவிட்டாராம்.
அட, தயாரிப்புக்கு முழுக்குப் போட்டதுமே இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறதே என்ற ஆச்சரியத்துடன், விற்ற பங்களாவை எப்படி மீண்டும் வாங்குவது எனும் யோசனையில் இறங்கிவிட்டார் சரண்!


Click it and Unblock the Notifications











