'வேட்டை'யில் சிம்புவை ஒரங்கட்டிய ஆர்யா-தமன்னாவுக்கு ஜோடி
பையா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அதன் பெயர் வேட்டை.
இந்தப் படத்துக்காக மதராஸபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் என்று அடுத்தடுத்து 2 வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள ஆர்யாவுடன் கைகோர்த்துள்ளார் லிங்குசாமி. இந்த படத்திற்கு முதலில் சிம்பு தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்போது சிம்பு நீக்கப்பபட அவருக்குப் பதில் ஆர்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இந்த படத்தை தயாரிக்கிறது தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் புரடக்ஷன்ஸ். இதில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். தமன்னா ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்திருப்பது இது தான் முதல் தடவை. ஆனால் லிங்குச்சாமி இயக்கத்தில் பையா படத்தில் கலக்கியவர் தமன்னா என்பது நினைவிருக்கலாம். எனவே பையா மேஜிக், வேட்டையிலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படம் இன்றைய தலைமுறையினரைத் திருப்திபடுத்தும். இதன் மூலம் ஆர்யா மிகப் பெரிய நடிகர்கள் வரிசையில் சேர்வார் என்று லிங்குசாமி தெரிவித்தார்.
சமீபகாலமாக சூப்பர் ஹிட் பாடல்களை அள்ளி அள்ளி வழங்கி வரும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கும் இசையமைக்கிறார். இதன் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா. அன்மையில் லிங்குசாமியும், அவரது படக் குழுவினரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து இதைப் பற்றி முறையே அறிவித்தனர்.
விரைவில் வேட்டை தொடங்குகிறதாம்!


Click it and Unblock the Notifications











