இன்று மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டி - மகுடம் வெல்வாரா ஏக்தா செளத்ரி?
பஹாமஸில் நடந்து வரும் 2009ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகுப் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஏக்தா செளத்ரிக்கு கிரீடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள் உள்ளனர்.
தனது மகள் பட்டம் வெல்ல வேண்டும் என்று வேண்டி அவரது தாயார் ரீத்தா செளத்ரி பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ரீத்தா கூறுகையில், நான் ஏக்தாவுடன் நேற்று பேசினேன். சற்று சோர்வாக இருப்பதாக தெதரிவித்தார். இருப்பினும் இறுதிச் சுற்றுக்கு முதல் நாள் இரவில் நன்கு தூங்கப் போவதாகவும், புத்துணர்ச்சியோடு இறுதிச் சுற்றை சந்திக்கவிருப்பதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஏக்தாவுக்கு இது பெரிய தினம். நிச்சயம் அவர் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏக்தாவுக்கு எப்போதுமே நம்பிக்கை அதிகம். பதட்டப்பட மாட்டார். முடிவை அறிவிக்கும்போது காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கப் போவதாக கூறியுள்ளார். நானும் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளேன்.
இறுதிச் சுற்றில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதட்டமே இல்லாமல் பதிலளிக்குமாறு ஏக்தாவை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், எப்போதும் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்குமாறும் அவரை அறிவுறுத்தியுள்ளேன். அது நமக்குப் பலத்தைக் கொடுக்கம் என்றார் ரீத்தா.
இன்னும் சில மணி நேரங்களில் அடுத்த மிஸ் யுனிவர்ஸ் யார் என்பது தெரிந்து விடும். அது ஏக்தாவாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில், இந்திய ரசிகர்களும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











