twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரச்சனையை தீர்க்க ரஜினி முயற்சி- தோல்வி!

    By Staff
    |

    Kuselan - Theater owners meeting
    குசேலன் பட விவகாரத்தைத் தீர்க்க படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், அந்த முயற்சிகள் முழு அளவில் பலனளிக்கவில்லை.

    இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

    படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

    பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

    இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

    நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தர வேண்டும் எனக் கோரினர்.

    இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

    இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

    மேலும் பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர்.

    இதைத்தவிர பிரமிட் சாயமிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

    ரஜினி சமரசம் நிராகரிப்பு:

    ஆனாலும் ரஜினியின் இந்த சமரசத் தீர்வுக்கும் சில திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

    இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கூடி விவாதித்தனர்.

    பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினர். அதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குசேலன் பட நஷ்டம் தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், எம்.ஜி. அடிப்படையில் வாங்கப்பட்ட தொகையில் 35 சதவீதத்தை திருப்பித் தருவதாக கூறினார்.

    இதுகுறித்து இன்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் கூறிய 35 சதவீத இழப்பீட்டை ஏற்க இயலாது. 70 சதவீத இழப்பீட்டை ஈடு கட்ட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறி விட்டனர்.

    எனவே இதுகுறித்து தீர்மானமாகப் போட்டு ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளோம்.

    இனி எம்.ஜி. கிடையாது:

    அதேபோல இனிமேல் எதிர்காலத்தில் எந்தப் படத்தையும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்குவதில்லை என்றும் முடிவு செய்யபப்ட்டுள்ளது என்றார்.

    3 நாளாக அலையும் கர்நாடக விநியோகஸ்தர்கள்:

    இதற்கிடையே, ரஜினியை சந்தித்து இழப்பீடு கோருவதற்காக 3 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த கர்நாடக மாநில விநியோகஸ்தர்கள், ரஜினியை சந்திக்க முடியாமல் முகாமிட்டுள்ளனராம்.

    இதுகுறித்து குசேலன் பட கர்நாடக விநியோகஸ்தரான மகிந்திரா என்பவர் கூறுகையில், எங்களுக்கு குசேலன் படத்தால் ரூ. 1.60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 70 லட்சம் ரூபாய்தான் வசூலாகியுள்ளது. இந்தப் பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

    ரஜினி சாரை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளோம். இருப்பினும் அவரை சந்திக்க முடியவில்லை என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X