சவூதியில் தியேட்டர்கள் மீதான தடை நீங்குகிறது
சவூதி அரேபியாவில் கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படங்களை, சினிமா தியேட்டர்களில் திரையிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படும்.
இதுகுறித்து சவூதி அரேபிய மத நெறி பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஷேக் இப்ராகிம் அல் கய்த் இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், சில படங்களைத் திரையிடலாம். சவூதி அரேபியாவுக்குப் பொருத்தமான படங்களாக அவை இருக்க வேண்டும்.
நல்ல விஷயங்களை அது சொல்வதாக இருக்க வேண்டும். இஸ்லாமின் கோட்பாடுகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
நான் சினிமாப் படங்களை தீய சக்திகள் என்று ஒருபோதும் கூறியதில்லை. எல்லா திரைப்படங்களையும் நாம் கெட்டவை என்று சொல்லி விட முடியாது என்றார்.
இந்தப் பேட்டிக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜெட்டாவிலும், அருகில் உள்ள தைப் நகரிலும் மனாஹி என்ற படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை திரையிட இளவரசர் அல்வலீத் பின் தலால் சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்தார்.
இந்தப் படம் நகைச்சுவைப் படமாகும். இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே திரைப்படங்களுக்கு மீண்டும் அனுமதி தர மத நெறி பாதுகாப்பு அமைப்பு முன்வந்துள்ளது.
மனாஹி திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி, திரைப்படங்கள் மீதான சவூதி அரேபியாவின் தடை நீங்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
தற்போது சவூதி அரேபியாவில் திரையரங்குகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சில காபி ஷாப்களில் வாடிக்கையாளர்களுக்காக திரைப்படங்களை காட்டுகிறார்கள். அதேசமயம் பெரும்பாலான படங்களின் டிவிடிக்கள் அங்கு தாராளமாக கிடைக்கிறது. இதுதவிர சாட்டிலைட் சானல்கள் மூலமும் மக்கள் படங்களைப் பார்க்கிறார்கள்.
திரைப்படத்தை, சினிமா தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், பக்கத்தில் உள்ள பஹ்ரைனுக்கோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கோ அல்லது மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கோதான் சவூதிவாசிகள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











