ஆஸ்கர் நாயகன்: ரஜினி-கமல் பாராட்டு!

உலகின் பெருமைக்குரிய திரைப்பட விருதான ஆஸ்கரை இரு பிரிவுகளில் வென்று இந்திய குறிப்பாத தமிழத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ் கலைஞர் ஒருவர் செய்துள்ள இந்த அரிய சாதனையை தனது சொந்த சாதனையாகவே தமிழ் திரைப்பட உலகம் கொண்டாடி வருகிறது. இன்று காலை முதலே ஒவ்வொரு கலைஞரும் ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள்.
சாமியார் மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கே போய் பலர், ரஹ்மான் குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களையும், மலர்க் கொத்துக்களையும் அளித்தனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே ரஹ்மானுக்கு தங்கள் இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இருவரும் ரஹ்மானுக்கு போன் செய்து தங்கள் சந்தோஷத்தையும், வாழ்த்துக்களையும் கூறினர். ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான் என ரஜினி கூறியுள்ளார்.
கே.பாலசந்தர்:
நான் தயாரித்த ரோஜா படத்திற்காக மணிரத்னம் இளைஞரான ரஹ்மானை அறிமுகம் செய்தபோதே அவர் என்னை கவர்ந்து விட்டார். ரஹ்மான் பல சாதனைகளை படைப்பார் என அப்போதே நினைத்தேன். அது இப்போது உண்மையாகி விட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன என்றார்.
சரத்குமார்:
திரைப்பட துறையின் உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதுகளை இந்தியாவுக்கு பெற்று தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் தமிழ் மண்ணில் பிறந்து இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
மாதவன்:
என்னால நம்பவே முடியலை.. இந்த விருதை பெற ரஹ்மான் முழுக்க முழுக்கத் தகுதியானவர். இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்துவிட்டார்.
எஸ்.ஜே.சூர்யா:
ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் எளிமையானவர். இந்த விருது வென்ற பிறகு கூட மிகவும் அமைதியாக, அடக்கமாக பேசியிருக்கிறார். அந்த குணம் யாருக்கும் வராது என்றார்.
அசின்:
ரஹ்மான் எப்பவும் என்னோட பேவரிட். அவரது அனைத்துப் பாடல்களும் என் இதயத்தில் நின்றவை. ஆஸ்கர் விருதினை அவர் நிச்சயம் பெற்றுவிடுவார் என்று நம்பினேன். அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.
கேஜே யேசுதாஸ்:
ரஹ்மானுடைய தந்தை ஆர்கே சேகருடன் பல படங்களில் பணியாற்றியவன் நான். பின்னர் அவர் பிள்ளை ரஹ்மானுடனும் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. நான் பார்த்து வளர்ந்த பிள்ளை இப்போது என்னைத் தலை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார். இன்னும் உயரட்டும் அவர் புகழ்.
மோகன்லால்:
ரஹ்மானுடன் இரு படங்களில் பண்யாற்றியுள்ளேன். இரண்டுமே மிகப் பிரமாதமான பாடல்களுடன் வந்து ரசிகர்களைக் கவர்ந்தன. மிக எளிமையான மனிதர். இந்த விருதுக்கு முழுவதும் ஏற்றவர் என்றார்.


Click it and Unblock the Notifications











