பாலாவின் முத்தப் பரிசு!

பாரதிராஜா, இளையராஜா, பாலா, சேரன், சீமான், அமீர் வரிசையில் இதோ இன்னொரு மதுரைக்காரர் கோடம்பாக்கத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் தன் முதல் முயற்சியிலேயே!.
அவர் சசிகுமார். சமீபத்தில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியபுரம் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் ஹீரோ!!.
இந்தப் படம் இவ்வளவு வெற்றி பெறும் என்று நானே கூட எதிர்பார்க்கல சார், என்று அடக்கத்துடன் சிரிக்கும் பரமன் ஸாரி... சசிகுமார், படம் உருவான விதத்தைக் கூறத் தொடங்கினார்.
இந்தப் படத்தின் கதையை உருவாக்கும்போதே இது அன்றைய, இன்றைய இளைஞர்களின் உணர்வுகளைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். வேலையற்ற இளைஞர்களின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதிரிதான். அவர்களை சமூக விரோதிகள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொண்டு பின்னர் தூக்கிப் போட்டு விடுவார்கள்.
இந்தக் கதை ஏற்கெனவே பலமுறை படங்களாக வந்துவிட்டதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் இம்மாதிரிக் கதைகள் வெற்றி பெறக் காரணம் இளைஞர்கள் தங்களை இன்னும் இதில் அடையாளம் காண்பதுதான்.
படத்தின் பின்னணி 80களில் இருப்பது போலத் தெரிய வேண்டும் என முயற்சி செய்தது இரண்டு தலைமுறையினரையும் ஒன்றாகத் திரையரங்குக்கு வரவழைக்கத்தான். அந்த சவாலில் வென்றது பெருமையாக இருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னைப் பாராட்டினார்கள். ஆனால் இதில் பெரிய பாராட்டு, நான் உருவாகக் காரணமாயிருந்த இயக்குநர் பாலா என்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததுதான்.
எத்தனை படம் செய்தோம் என்ற கணக்கு முக்கியமில்லை.
சுப்பிரமணியபுரம் முடிந்ததும் பல பெரிய நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால் இப்போதைக்கு சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறேன்.
என் இயக்கத்தில் 6 மாதங்கள் கழித்து படம் செய்கிறேன். இப்போது எழுந்துள்ள எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அந்தப் படத்தை உருவாக்க எனக்கு இந்த அவகாசம் தேவைப்படுகிறது, என்கிறார் சசிகுமார்.
இந்தப் படத்திலும் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கப் போகிறாராம் சசிகுமார்.


Click it and Unblock the Notifications











