இன்று வெளியாகும் மூன்று படங்கள்!
ஆடி மாத சென்டிமெண்டையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, பரபரவென பட வெளியீட்டில் இறங்கிவிட்டார்கள் கோடம்பாக்க தயாரிப்பாளர்கள்.
இன்று சுந்தர் சி, கரண் மற்றும் வினய் நடித்துள்ள மூன்று தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் கமல் மகள் ஸ்ருதியின் லக் படமும் தமிழ்ப் படங்களுக்கு நிகராக வெளியாகிறது.
வெளியாகும் மூன்று தமிழ்ப் படங்களுமே அதிரடி ஆக்ஷன் மசாலா.
முதல் படம் ஐந்தாம்படை. சுந்தர் சி நடித்து, அவர் மனைவி குஷ்பு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் இது. எப்படியாவது பீல்டில் நிலைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தில் சிம்ரன் ஏக கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம் இந்தப் படத்தில்... அதுவும் சென்சார் அதிகாரிகளே கத்தரி போடும் அளவுக்கு. பத்ரி இயக்கியுள்ளார்.
அடுத்த படம் கரணுக்கு மிக முக்கியமானது. ஷம்மு, உதயதாரா ஜோடிகளுடன் அவர் நடித்துள்ள 'மலையன்' என்ற இந்தப் படத்தை எம்பி கோபி இயக்கியுள்ளார். சிவாகாசி பட்டாசுத் தொழிற்சாலை தீ விபத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.
வினய் நடித்துள்ள மோதி விளையாடு, பெரும் சோதனைகளுக்குப் பிறகு ஒருவழியாக வெளியாகிறது. சரண் இயக்கியுள்ளார். கலோனியல் கஸின்ஸ் இசையமைத்துள்ளனர். கரணுக்கும் வினய்க்கும் முக்கியமான படம் இது.
இந்த மூன்று படங்களுக்குமே தியேட்டர்கள் கிடைப்பது பெரும் சிரமமாகியுள்ளது. காரணம் நல்ல தியேட்டர்களைப் பிடித்துவிட்ட நாடோடிகள் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதுதான். இன்னொரு பக்கம், ஹாரி பாட்டர், லக் என பிற மொழிப் படங்களும் ஏ கிளாஸ் திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
எனவே கிடைத்த திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். தியேட்டர்கள் பற்றாக்குறை ஒருபக்கமிருந்தாலும், சரியான திட்டமிடல் இல்லாததே இந்த நிலைக்குக் காரணம்.


Click it and Unblock the Notifications











