ரஹ்மான் வழியில் யுவன்!

கிட்டத்தட்ட நான்கு வருட கால யோசனை, ஆலோசனைகளுக்குப் பின்னர் யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் லைவ் ஷோ இறுதியாகி விட்டது.
கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான ஸ்ரீ என்பவர்தான் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார். ஏப்ரல் 2ம் தேதி யுவனின் முதல் லைவ் ஷோ நடைபெறுகிறது.
டோரன்டோவில் உள்ள ரோஜர்ஸ் மையத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 50 பாடகர், பாடகியர், காமெடி நடிகர்கள், நடனக் கலைஞர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளனர். ஆனால் கூடுதலாகவும் ஆகலாம் என்கிறார்கள்.
பிளேஸ், பிரேம்ஜி அமரன், ஷ்வேதா, ஹரீஷ், சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ், பவதாரிணி ஆகியோர் பாடவுள்ளனர்.
நிகழ்ச்சியின் முக்கிய சர்ப்ரைஸ் - இசை ஞானி இளையராஜா. இந்த நிகழ்ச்சியில், யுவனுடன் இணைந்து ஒரு பாடலைப் பாட இளையராஜா ஒப்புதல் வழங்கியுள்ளாராம். எனவே இசைஞானி ரசிகர்களுக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு இனிய அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களை நான் இதுவரை நேரடியாக சந்தித்ததில்லை. எனவேதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டேன் என்கிறார் யுவன்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இதுபோல வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவரது வழியில் தற்போது யுவனும் தனது இசைப் பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











