ராஜ்கிரணின் மலைக்கள்ளன்!

எம்.ஜி.ஆர்., பானுமதி நடிப்பில் உருவான படம் மலைக்கள்ளன். பல்வேறு சாகசக் காட்சிகள் நிரம்பிய இப்படம் அக்காலத்தில் சிறப்பாக ஓடிய படம். இன்றளவும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மனில் நீங்கா இடம் பெற்ற படம்.
இப்போது அதே பெயரில் ராஜ்கிரண் நடிக்க புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தை ராஜ்கிரணே தயாரித்து, இயக்கவுள்ளார். ஹீரோவாகவும் அவரே நடிக்கிறார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரணும், இளையராஜாவும் இணைகிறார்கள் என்பதால் படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம் குறித்து ராஜ்கிரண் கூறுகையில், எம்.ஜி.ஆர். காலத்தால் அழியாதவர். அவருடைய சக்தி எனக்குத் தெரியம். அவருடைய மனிதாபிமானம், நடிப்புத் திறமை உள்ளிட்டவற்றால் கவரப்பட்டே எனது படத்திற்கு மலைக்கள்ளன் என பெயரிட்டுள்ளேன்.
மலைக்கள்ளன் படத்தின் கருத்துதான் இப்படத்தின் கதையுமாகும். ஆனால் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக எப்படி சமூகத்தை சீரமைக்கலாம் என்பதை எனது படத்தில் சொல்லப் போகிறேன்.
எனது குரு, இளையராஜாவுடன் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைகிறேன்.
எனது வயதுக்கேற்ற பொருத்தமான கேரக்டர்களில்தான் இனிமேல் நடிப்பேன். எனது படத்தில் இடம் பெறும் வழக்கமான சென்டிமென்ட் காட்சிகள் இப்படத்திலும் இடம் பெறும். மே மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றார் ராஜ்கிரண்.
சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்து விட்டீர்களாமே என்று ராஜ்கிரணிடம் கேட்டபோது, நான் இப்போது பாசிட்டிவான ரோல்களில்தான் நடித்து வருகிறேன். தவமாய் தவமிருந்து படத்தில் பொறுப்பான ஒரு தந்தை கேரக்டரில் நான் நடித்திருந்ததைப் பார்த்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எனக்கு உணர்ச்சி பொங்க கடிதம் எழுதினர். என்னை மாதிரி ஒரு தந்தை கிடைக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று அதில் கூறியிருந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் நான் சிவாஜி படத்தில் சுமன் நடித்த கேரக்டரில் நடித்திருந்தால் அது நிச்சயம் ரஜினி சாரின் படத்திற்குத்தான் பாதகமாக அமைந்திருக்கும். அத்தனையும் கெட்டுப் போயிருக்கும். எனவேதான் அதில் நான் நடிக்க மறுத்தேன் என்றார் ராஜ்கிரண்.
நடிகராக பல படங்களில் ராஜ்கிரண் நடித்திருந்தாலும், அவரது இயக்கத்தில் வரும் 3வது படம் மலைக்கள்ளன். இதற்கு முன்பு எல்லாமே என் ராசா, அரண்மனைக் கிளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ராஜ்கிரண். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். மலைக்கள்ளனும் அந்த வரிசையில் சேரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ராஜ்கிரண்.
'நல்லி எலும்பைக் கடிக்க' மறந்துடாதீங்கண்ணே!


Click it and Unblock the Notifications











