twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வறுமையுடன் போராடி வென்ற பூக்குட்டி..!

    By Staff
    |

    Pookuty family
    -இசக்கிராஜன்

    லாஸ் ஏஞ்சலெஸில் தனது முத்திரையை சத்தமாக பதித்துள்ள கேரளாவின் ரெசூல் பூக்குட்டி, வறுமையுடன் போராடி வென்றவர். அவரது இந்த வெற்றிக்குப் பின்னர் மறைந்திருப்பது அயராத உழைப்பு.

    ஸ்லம்டாக் படத்தில் சிறந்த இசைக்கலவைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் ரெசூல் பூக்குட்டி. கேரளா மாநிலத்தை சேர்ந்த இவரது சொந்த ஊர் புனலூர் அருகே உள்ள விலக்கு பாறை ஆகும். ரெசூல்பூக்குட்டிக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும் அந்த சின்னஞ்சிறிய கிராமம் ஆனந்தக் கூத்தாடியது.

    சந்தோஷத்திலிருந்து இன்னும் விலகாமல் உள்ள பூக்குட்டியின் வீட்டுக்கு தட்ஸ்தமிழுக்காக நாம் போனோம்.

    விலக்கு பாறை புனலூரில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் உள்ளது. 2600 வீடுகளை கொண்ட சிறிய கிராமம் இது. ரெசூல் பூக்குட்டி பிறந்து வளர்ந்தது எல்லாம் இதுதான்.

    இவரது தந்தை பிப்பீ பூக்குட்டி, தாய் நபிசத், இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் என 7 பி்ள்ளைகள். இவர்களில் 7வது மகன்தான் ரெசூல்பூக்குட்டி. இஸ்லாமியர்களான இவர்கள் விலக்கு பாறையில் இந்துகளுடன் மத வேறுபாடின்றி பழகி வசித்து வருகின்றனர்.

    ரெசூல் பூக்குட்டியின் தாயும், தந்தையும் இறந்துவிட்டனர். சகோதரர்கள் விலக்கு பாறையில் வசித்து வருகின்றனர். மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கு பூக்குட்டி 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை படித்தார். அருகில் உள்ள காயன்குளம் கிராமத்தில் 5 முதல் 7ம் வகுப்பு வரை படித்தார். இதன்பிறகு மேல்நிலை படிப்பை முடித்து எல்எல்பி (சட்டப்படிப்பு) சேர்ந்தார்.

    ரெசூல் பூக்குட்டிக்கு சிறு வயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்ஜினீயர், கலெக்டர் ஆக வேண்டும் என விரும்பினார்.

    கூடவே, மிமிக்ரி, மோனோ ஆக்ட் போன்ற கலைகளில் ஆர்வம் உண்டு. இந்த வேளையில் எல்எல்பி படிப்பு பாதியில் நின்றது. சினி்மா துறையில் ஈடுபட ரெசூல்பூக்குட்டி விரும்பினார். இதற்காக புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்க திட்டமிட்டார்.

    குடும்பத்தின் பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. கலங்கி நின்ற ரெசூல் பூக்குட்டிக்கு வெளிநாட்டில் இருந்து அக்காள் கணவர் நாசர் கை கொடுத்தார்.

    பணத்தை பற்றி கவலைப்படாதே, விருப்பம் இருந்தால் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படி, என்று அவர் கூறியதை தொடர்நது 13 ஆண்டுகளுக்கு முன்பு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தார்.

    அதில் 2 வருட சவுண்ட் மிக்சிங் கோர்சை முடித்த அவர் மும்பை சினிமா துறையில் பணியாற்ற தொடங்கினார்.

    சினிமா துறையினருக்கே உரித்தான ஆஸ்கார் கனவு இவருக்கும் இருந்தது. கடின உழைப்பால் வேகவேகமாக முன்னேறினார். 2006ம் இவர் பணியாற்றிய பேக்சில்ம் படத்திற்காக 3 விருதுகள் இவருக்கு கிடைத்தது.

    இதன்பிறகு தான் யார் இந்த பூக்குட்டி என திரை உலகினர் உற்று நோக்க தொடங்கினர்.

    சவுண்ட் மிக்சிங்கில் ஏதாவது புதுமை செய்து சாதிக்க வேண்டும் என்ற வேகம் அவருக்கு இருந்தது. இதற்கான வாய்ப்பு ஸ்லம்டாக் படம் மூலமாக வந்தது. ஸ்லம்டாக்கில் அவரது முழு திறமையையும் வெளிப்படுத்தியதின் விளைவாக ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்துள்ளது.

    ஆஸ்கர் விருதுக்கு ஸ்லம்டாக் பரிநதுரைக்கப்பட்டபோது சவுண்ட் மிக்சிங்கில் பூக்குட்டியின் பெயர் இருந்தது. இதன் பிறகு கடந்த மாதம் 28ம் தேதி தனது சொந்த ஊரான விலக்கு பாறைக்கு வந்தார்.

    பூக்குட்டி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார் என்பதை அறிந்த கேரளா கல்வி மந்திரி பேபி, வேளான் மந்திரி ரத்னாகரன் பூக்குட்டியை சொந்த ஊரில் வரவேற்றனர்.

    விலக்கு பாறையில் உள்ள ஸ்ரீமாதா தேவர் கோயிலில் வைத்து அவர் கிராம மக்களையும், நண்பர்களையும், பள்ளி தோழர்களையும் சந்தித்து பேசினார். இந்த மகாதேவர் கோயில் பூக்குட்டியின் வாழ்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

    இந்து-முஸ்லிம் சமுதாயத்தினர் வசிக்கும் இந்த கிராமத்தில் மத வேறுபாடு பார்ப்பதில்லை. ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்ட பி்ன் அவர் தனது நண்பர்களிடம் கூறுகையில் எனக்கு ஆஸ்கர் விருது கிடைக்க மகாதேவர் கோயிலில் வழிபாடு செய்யுங்கள் என்றார். அப்போது எல்லோரும் பூக்குட்டிக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என மனம் உருக வேண்டினர். மேலும் அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஆஸ்கர் விருதினை வாங்கியபோது கூட, பூக்குட்டி பேசுகையில், சிவராத்திரி தினமான இன்று இந்த விருது எனக்குக் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறி தான் மதங்களைக் கடந்தவன் என்பதை உணர்த்தினார் என்பது நினைவிருக்கலாம்.

    ஒட்டு மொத்த விலக்கு பாறை கிராமமே பூக்குட்டிக்கு ஆஸ்கர் விருது கிடைக்க கோயிலில் விடிய விடிய பிரார்த்தனை செய்தது. பூக்குட்டிக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டதும் கிராமம் முழுவதும் உற்காச வெள்ளம் பரவியது.

    பட்டாசு வெடி்த்தும், இனிப்புகள் வழங்கியும் கிராம மக்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். ஆஸ்கர் விருதை பெற்ற பூக்குட்டி மகிழச்சியுடன் கூறுகையில் மகா சிவராத்திரியான இன்று எனது நாட்டவருக்கும், ஊர் மக்களுக்கும், உறவினர்களுக்கும் கிடைத்த பரிசு இது என்றார்.

    இதை கேட்டுக் கொண்டிருந்த விலக்கு பாறை கிராம மக்கள் மேலும உற்சாகம கொண்டனர். பொதுவாக பூக்குட்டி படிக்கும்போது விலக்கு பாறை பகுதியில் அடிப்படை வசதிகளே கிடையாது. அப்போது பஸ் வசதியும் அங்கு இல்லை. அடிப்படை வசதியற்ற குக்கிராமத்தில் பிறந்த பூக்குட்டி இன்று சர்தேச அளவில் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கரை எட்டி பிடித்துள்ளார்.

    தொட்டு விடும் தூரம் தான் எதுவும் - தொடர்ந்து முயன்றால் என்பதற்கு பூக்குட்டி நல்ல உதாரணம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X