ரஜினி-கமல் மகள்கள் கூட்டணி

தந்தைகள் இருவரும் தத்தமது பாதையில் தனித்துவத்துடன் நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் புதல்விகள் இருவரும் சைலன்ட்டாக கை கோர்த்துக் கொண்டுள்ளனர்.
செளந்தர்யாவின் கற்பனை, இயக்கம், அனிமேஷனில் உருவாகும் படம் சுல்தான் தி வாரியர். இந்திய சூப்பர் ஸ்டார் ஒருவர் குறித்த முதல் அனிமேஷன் படம் இது.
இப்படத்தில் செளந்தர்யாவுடன், ஸ்ருதி கமல்ஹாசன் கை கோர்த்திருக்கிறார். அதாவது சுல்தான் படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதி பாடியுள்ளாராம்.
இசையில் நாட்டம் உடைய ஸ்ருதி தேவர் மகன், ஹே ராம் ஆகிய படங்களில் பாடியுள்ளார். தற்போது இசை ஆல்பம் உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார். விரைவில் நடிக்கவும் வரப் போகிறார். மாதவன் தான் அவரது முதல் ஹீரோவாகிறார்.
இந்த நிலையில், சுல்தான் தி வாரியரில் ஒரு பாடல் பாட வேண்டும் என செளந்தர்யா ஸ்ருதியை அழைத்துள்ளார். செளந்தர்யாவே விரும்பிக் கேட்டுக் கொண்டதால் சட்டென்று பாட சம்மதித்தாராம் ஸ்ருதி.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கமல்ஹாசனின் டிக் டிக் டிக் படத்தில், இசைஞானி இளையராஜா இசையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு பாடல் பாடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இப்போது ரஜினியின் அனிமேஷன் படத்தில் கமல்ஹாசனின் மகள் பாடவுள்ளார்.
திரையுலகில் இந்த புதிய கூட்டணி பெரும் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











