சின்னத்திரை சஞ்சீவ்-பிரீத்தி திருமணம்

வெறுமனே சஞ்சீவ் என்றால் சட்டென்று அடையாளம் புரிபட சில நிமிடமாகும்... ஆனால் திருமதி செல்வம் தொடரின் ஹீரோ, மானாட மயிலாட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் என்றால் எல்லோருக்கும் உடனே சஞ்சீவின் முகம் நினைவுக்கு வந்துவிடும்.
சித்தி தொடங்கி பந்தம் வரை பல சீரியல்களில் நடித்தவர் ப்ரீத்தி.
இருவரும் இணைந்தது எப்படி?. சஞ்சீவும் பிரீத்தியும் இதுகுறித்துக் கூறியதாவது:
நாங்கள் இருவரும் எந்தத் தொடரிலும் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் ஒருவர் திறமையை மற்றவர் பாராட்டுவதன் மூலமே நல்ல நண்பர்களானோம். அந்த நட்பே காதலானது.
ப்ரீத்தி எனக்கு ஒரு நாள் போன் பண்ணப்போ, எனக்கு ஓவரா அட்வைஸ் பண்ற மாதிரி தெரிஞ்சது. நானும், "இவ்வளவு அட்வைஸ் பண்றியே... நீ என்ன என்னை கல்யாணமா பண்ணிக்கப் போறே?'ன்னு வாய் தவறிக் கேட்டுட்டேன். அவரும் சட்டுன்னு, 'அதுக்கென்ன பண்ணிக்கிட்டா போச்சி...' என்றார்.
இப்போது அதுவே கல்யாணம் வரை வந்திருக்கிறது. ஆனால் நிஜமாகவே பிரீத்தியின் நல்ல குணங்கள் எனக்குப் பிடிக்கும். நான் வாய்விட்டுக் கேட்க நினைத்ததை என்னையும் முந்திக்கொண்டு அவர் கேட்டுவிட்டார்..." என்றார் சஞ்சீவ்.
இதுபற்றி பிரீத்தி பேசும்போது, நான் சஞ்சய்யோட தீவிர விசிறி. மொபைல்ல பேசிப் பேசியே நட்பாகி பின்னர் காதலர்களான ஜோடி நாங்கள் என்கிறார்.
இவர்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தபோது திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டினார்கள். இதைத் தொடர்ந்து மார்ச் 12ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அன்று காலை சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஆறுபடையப்பர் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது.
14ம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமண வரவேற்பு விழா நடக்கிறது. இதில் மணமக்களின் நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
சஞ்சீவ் திருமணம் குறித்து தெரியவந்த போது, மிகவும் சந்தோஷப்பட்டு வாழ்த்தியவர் நடிகர் விஜய். காரணம் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். திருமணத்தையும் இவரே முன்னின்று நடத்தப் போகிறார்.


Click it and Unblock the Notifications











