twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தமிழை கொல்லும் உதித் நாராயணன்கள்'!

    By Staff
    |

    Vairamuthu
    பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

    திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள்.

    அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள் உச்சரித்து ஆச்சரியப்படுத்தினார்கள்.

    ஆனாலும் ஜேசுதாஸ் போன்ற சிலர் கடைசி வரை ல, ள, ழ வித்தியாசத்தைக் காட்டாமலேயே பாடி முடித்து பெயரும் வாங்கி விட்டனர். அந்தமான் காதலி படத்தில் அவர் தவறாகப் பாடியதை ஒருமுறை வைரமுத்து சுட்டிக் காட்டி பேசியபோது, ஜேசுதாஸ் ரொம்பவே கோபப்பட்டார்.

    இப்போது உதித் நாராயண் போன்றவர்களின் வாயில் தமிழ் நுழைந்து கிழிந்து நார் நாராக நாறிப் போய் வெளியே வருவதை லேட்டஸ்ட் பேஷன் என்கிறது கோலிவுட்.

    இந் நிலையில் தற்காலத்தில் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் சிலர் பாடும் அழகை வைரமுத்து கடுமையாக சாடியுள்ளார்.

    ஏவி.எம். நிறுவனத்தின் புதிய படத் தொடக்க விழாவுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வைரமுத்து பேசுகையில்,

    இப்போதெல்லாம் பெரும்பாலான பாடகர்கள், பாடகிகள், தமிழகத்தைச் சேராதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழை சரிவர உச்சரிக்கத் தெரியவில்லை.

    பிற மொழிப் பாடகர்கள், பாடகிகள் தமிழ்த் திரையுலகுக்கு வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழை கொல்லக் கூடாது.

    கடந்த காலங்களில் உச்சரிப்புக்குப் பெயர் போன பாடகராக டி.எம். செளந்தரராஜன் திகழ்ந்தார். இத்தனைக்கும் அவருக்கு தாய் மொழி தமிழ் அல்ல (இவர் குஜராத்தின் செளராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்). ஆனாலும் ஒரு தமிழனால் கூட இப்படி உச்சரிக்க முடியுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு தமிழ் உச்சரிப்பில் அவர் மன்னனாக திகழ்ந்தார்.

    அதேபோல பி.சுசீலாவுக்கு தாய் மொழி தெலுங்கு. ஆனால் ஒரு பச்சைத் தமிழச்சியின் தமிழைப் போலவே அவர் அழகாக பாடினார்.

    ஒருமுறை ஜேசுதாஸ் பாடியபோது அவரது உச்சரிப்பில் நான் சில திருத்தங்களைக் கூறினேன். அதன் பிறகு அவர் பாடிய பாடல்களில் தமிழ் உச்சரிப்பு பிரச்சினை வரவே இல்லை.

    ஆனால் உதித் நாராயணன் பாடுவதைப் பாருங்கள். ஒருமுறை தேவாவின் இசையில் அவர் ஒரு பாடலைப் பாடியபோது, எனது பாடலை மிக மிக தவறாக உச்சரித்தார். நான் எழுதிய வார்த்தை பிரியமான பெண்ணை ரசிக்கலாம் என்பது. ஆனால் அவரோ, பெரியம்மாவின் பெண்ணை ரசிக்கலாம், தப்பில்லை என்று பாடி விட்டார்.

    அதைக் கேட்டு நான் அதிர்ந்து போய் விட்டேன். அவரது தவறான உச்சரிப்பு ஒரு கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் வகையில் இருந்தது.

    எனவேதான் பாடகர்கள் சரிவர உச்சரித்துப் பாட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.

    சில காலங்களுக்கு முன்பு வரை பாடலை எழுதிய பாடலாசிரியர்களே அதை எப்படி உச்சரித்துப் பாட வேண்டும் என பாடகர்கள், பாடகிகளுக்கு சொல்லிக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது இசையமைப்பாளர்கள் இப்போது அதைக் கடைப்பிடிப்பதில்லை.

    திரைப்பட இசை என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் பலரும் ஈடுபட்டுள்ளனர். அத்தனை பேரும் சேர்ந்து நமது மொழி சிதைவதற்கு, ஜீவனற்றுப் போவதற்கு அனுமதிக்கக் கூடாது. காக்க முயல வேண்டும். தமிழ் தெரியாத பாடகர்களோ, பாடகிகளோ தமிழை கற்றுக் கொண்டு பாட முன்வராவிட்டால் அவர்களை ஆதரிக்கக் கூடாது என்றார் வைரமுத்து.

    வைரமுத்து சொல்வது மெத்தச் சரி!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X