நானும் ஹீரோதாங்க!-யுவன் கலகல

இசையமைப்பாராக மட்டும் இருந்த யுவன், சமீப காலமாக ஒரு பாடலுக்குத் தோன்றி ஆடவும் செய்கிறார். ஆரம்பத்தில் இவரும் இயக்குநர் செல்வராகவனும் இணைந்து ஒயிட் எலிபெண்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆனால் எதிர்பாராத சிக்கலால் அந்த நிறுவனம் கலைக்கப்பட்டதுடன், நட்பிலும் சின்ன விரிசல் விழுந்தது.
இப்போது தனியாக பிங்ஸ்டோன் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
இந்த நிறுவனம் மூலம் நல்ல படங்களைத் தொடர்ந்து தயாரிப்பது யுவனின் விருப்பமாம்.
இதுகுறித்து யுவன் கூறுகையில்,
இசையமைப்பதோடு நின்று விடும் ரகமல்ல நான். நல்ல படங்களைப் பார்ப்பதும் அதை விமர்சிப்பதும் எனக்குப் பிடித்த விஷயங்கள்.
அந்த ஆர்வம்தான் சில படங்களில் பாடகராக தலைகாட்ட வைத்தது. பட நிறுவனம் தொடங்க வைத்துள்ளது.
நல்ல படங்களை தயாரிக்க விரும்புகிறேன். அதற்காகவே பிங்ஸ்டோன் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். அடுத்த மாதம் முதல் இந்நிறுவனம் செயல்படத் தொடங்கும்.
முதல் படத்துக்கு நானே கதையும் எழுதியுள்ளேன். எஸ்.டி. சபா இயக்குகிறார். சரோஜா ஹீரோ சிவாதான் இந்தப் படத்திலும் நாயகன். ஹீரோயின் முடிவாகவில்லை. காதல், காமெடி நிறைந்த படமாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறோம்.
நல்ல படம் தயாரிக்க வேண்டும் என்பதே முக்கியம். அது சின்ன படமா, பெரிய படமா என்பதல்ல... பெரிய ஹீரோக்களை வைத்தும் படங்களைத் தயாரிப்பேன். படம் தயாரிப்பதால் இசையிலிருந்து என் கவனம் சிதறாது.
பட வேலைகளைக் கவனிக்க தனி டீம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளேன்.
நீங்களே ஹீரோவாக நடிப்பீர்களா?
ஹீரோ.... பார்க்கலாம். எனக்கும் நடிக்க விருப்பமிருக்கிறது. எனக்கேற்ற கதை அமைந்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன். என் தயாரிப்பு என்றல்ல, வெளித் தயாரிப்பிலும் கூட நடிப்பேன்.
செல்வராகவனுடன் கருத்து வேறுபாடு உண்மைதானா?
செல்வராகவனுக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். இப்போது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து விலகிவிட்டேன். மற்றபடி நட்பு தொடர்கிறது. தொழில்ரீதியாக இணைவது சரியாக வராததால் பிரிந்துவிட்டோம்.
ரீமிக்ஸ் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தவர் நீங்கள்தான்... இப்போது அந்த கலாச்சாரம் எல்லை மீறிப் போகிறதே...
ரீமிக்ஸ் பாடல்களுக்கு மவுசு இருப்பதால்தான் இசையமைக்கிறேன். ஆனால் அதை முறைப்படி செய்கிறேன். பழைய பாடலுக்கு உரிமையுள்ளவர்களிடம் அனுமதி பெறுகிறேன். அதன் பின்பே ரீமிக்ஸ் பாடலுக்கு இசையமைக்கிறேன். பில்லா பாடல்களுக்கு எம்எஸ்வியிடமும், அதன் தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்றேன். என் தந்தையிடம் அனுமதி பெற்ற பிறகே அவர் ட்யூன்களை ரீமிக்ஸ் செய்கிறேன் என்கிறார்.


Click it and Unblock the Notifications











