மிர்ச்சி மூவீஸுடன் இணையும் விஜி

டைம்ஸ் குழுமத்தின் பொழுதுபோக்குப் பிரிவான மிர்ச்சி மூவிஸ், தமிழில் பிரகாஷ் ராஜின் டூயட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெள்ளித்திரை படத்தைத் தயாரித்து, தமிழில் முதன் முதலாக காலெடி எடுத்து வைத்தது.
தற்போது 2வது படத்திற்கு தயாராகி விட்டது மிர்ச்சி. இம்முறையும் வெள்ளித்திரை இயக்குநர் விஜியே, மிர்ச்சியின் 2வது படத்தையும் இயக்கப் போகிறார்.
சமீபத்தில்தான் வெள்ளித்திரை சப் டைட்டிலுடன் வட இந்தியாவிலும் திரையிடப்பட்டது. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும், இயக்குநர் விஜியின் திறமையான இயக்கத்தையும் பார்த்து தனது 2வது படத்தையும் விஜியை வைத்தே உருவாக்க திட்டமிட்டது மிர்ச்சி மூவிஸ்.
இதுகுறித்து மிர்ச்சி மூவிஸ் நிறுவனத்திந் தலைமை நடவடிக்கை அதிகாரி முனீஷ் பூரி கூறுகையில், விஜி மிகவும் திறமையான இயக்குநர். திரைப்படத் தொழில் மீது அவருக்கு நிறைய மரியாதையும், பக்தியும் உள்ளது. அவரை வைத்து எங்களது அடுத்த படத்தை உருவாக்குவதில் பெருமை அடைகிறோம் என்றார்.
விஜி ஏற்கனவே மொழி படத்தின் வசனத்தை எழுதியவர். மஜா, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி படங்களிலும் விஜிக்கு முக்கியப் பங்கு உண்டு.
மிர்ச்சியுடன் மீண்டும் இணைவது குறித்து விஜி கூறுகையில், மிர்ச்சி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது கெளரவம் தருகிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பில் மிர்ச்சி மூவிஸ் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளது. அவர்களின் தொழில் முறையிலான அணுகுமுறை மிகவும் சிறப்பாக உள்ளது என்றார்.
மிர்ச்சி மூவிஸ் நிறுவனம் தமிழில் அடுத்தடுத்து பல படங்களைத் தயாரிக்கவுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான சாக்லேட் படத்தின் தமிழ் உரிமையை மிர்ச்சி வாங்கியுள்ளது. இதுதவிர மணிரத்தினத்தின் முன்னாள் உதவியாளர் மிலிந்த் ராவை வைத்து காதல் 2 கல்யாணம் என்ற படத்தையும் மிர்ச்சி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











