ஒச்சாயிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்த திருமாவளவன்!

கடந்த வாரம் ஒச்சாயி என்ற தமிழ்ப் படம் வெளியானது. திரவிய பாண்டியன் தயாரித்து நடித்திருந்தார். இந்தப் படத்தின் தலைப்பு தமிழில் இல்லை என்று கூறி தமிழக அரசு அதிகாரி்கள் கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டதால் அதிர்ச்சி அடைந்தார் தயாரிப்பாளர்.
காரணம் ஒச்சாயி என்பது தென்மாவட்ட மக்களின் முக்கிய தெய்வங்களில் ஒன்று. பிரபலங்களின் குலதெய்வமாகத் திகழ்கிறது.
வ குவாட்டர் கட்டிங் என்ற படத்துக்கே வரிவிலக்கு தரும் தமிழக அரசின் வணிக வரித் துறையினர், ஒச்சாயி என்ற தூய தமிழ்ப் பெயருக்கு எதிராக நிற்கிறார்களே என குமுறினார் தயாரிப்பாளர்.
அவருக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும் களமிறங்கியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா பாண்டியன், ஒச்சாயிக்கு வரி விலக்கு அளிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டார்.
அவரைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஒச்சாயிக்கு வரி விலக்கு அளிக்கக் கோரி வணிக வரித்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "ஒச்சாயி தமிழ்ப் பெயர் அல்ல என்றும், அதனால் வரி விலக்கு அளிக்க இயலாது என்றும் அரசு கருதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் காலம்காலமாக வணங்கி வரும் குலதெய்வமான ஒச்சாயி அம்மனின் பெயரையே திரைப்படத்துக்கு சூட்டியுள்ளனர்.
'மக்கள் குறைகளை உன்னிப்பாகக் கவனிப்பவள், கேட்பவள்' என்ற பொருளில் அந்த அம்மனின் பெயர் கையாளப்படுகிறது.
மிக அருமையான தூய்மையான தமிழ்ச் சொல்லாகவே அப்பெயர் கையாளப்பட்டு வருகிறது. எனவே, இத்திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்திட வேண்டும்", என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











