அரசு மானியம் பெறும் படங்கள்-தேர்வு செய்ய குழு!
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் அளித்து வருகிறது தமிழக அரசு.
இந்த மானியம் பெறுவதற்கு தகுதியான படங்களைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ் திரைப்படங்களுக்கு, அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2007ம் ஆண்டிலும், 2008ம் ஆண்டிலும் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய தரமான திரைப் படங்களை தேர்வு செய்ய ஒரு குழுவை முதல்வர் கருணாநிதி அமைத்து ஆணையிட்டுள்ளார். இந்த குழுவுக்கு, நீதியரசர் பொன்.பாஸ்கரன் தலைவராக இருப்பார்.
சரோஜாதேவி-வாகை சந்திரசேகர்
இந்த குழுவின் உறுப்பினர்களாக, திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகை சரோஜா தங்கவேலு, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளர், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துணைச் செயலாளர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள், என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











