twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குசேலன் முன்பதிவு ஆரம்பம்!

    By Staff
    |

    Rajini with Nayanatara
    ஜூலை 31-ம் தேதி ரிலீசாகும் குசேலனைத் தரிசிக்க ரசிகர்கள் இப்போதே டிக்கெட்டுக்கு முட்டி மோதத் தொடங்கிவிட்டனர். நாளை முதல் அதிகாரப்பூர்வமாக டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பமாகிறது சென்னை மற்றும் தமிழகத்தின் இதர திரையரங்குகளில்.

    ஆந்திராவிலும் நாளை முதல் ரிசர்வேஷன். ஆனால் அமெரிக்கா, கனடா, மலேஷியா, இலங்கை மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிவிட்டன. முதல் வாரத்துக்கான எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து போய்விட்டதால், அடுத்த வாரத்துக்கான விற்பனை துவங்கப்பட்டுள்ளதாக பிரமிட் நிறுவனம் தெரிவிக்கிறது.

    சென்னை நகரில் மட்டும் 15 (பிருந்தா தவிர்த்து) திரையரங்குகளில் குசேலன் திரையிடப்படுகிறது. அண்ணாசாலையில் சாந்தி, அண்ணா, ஆல்பர்ட், சத்யம், உட்லண்ட்ஸ் என 5 திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக குசேலன் வெளியிடப்படுகிறது.

    ரஜினியின் சிவாஜி திரைப்படம் பிருந்தா உள்பட 18 திரையரங்குகளிலும் (இது கணக்கில் காட்டப்பட்ட எண்ணிக்கை. ஆனால் முதல் இரு வாரங்களில் மட்டும் 26 திரையரங்குகளில் ஓட்டி வசூல் பார்த்தார்கள்!!), அதன் தெலுங்குப் பதிப்பு காஸினோவிலும் வெளியானது. அதைவிட அதிக எண்ணிக்கையிலான திரையங்குகளில் வெளியிடவே முதலில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திட்டமிட்டது.

    ஆனால் ரஜினி இதை விரும்பவில்லை. இந்தப் படம் நீண்ட நாட்கள் ஓடவேண்டும், எப்போதும் ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் இருக்க வேண்டும் என்றால் குறைவான திரையரங்குகளில் வெளியிடுங்கள் என பிரமிட் சாய்மிரா நிர்வாக இயக்குநரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

    ஆந்திராவில் குசேலனின் தெலுங்குப் பதிப்பு கதாநாயகுடு 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஐதராபாத்தில் மட்டும் 24 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. திருப்பதியில் 12 திரையரங்குகள் கதாநாயகுடுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெரிவித்துள்ளார்.

    எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்காததால் முதலில் இப்படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே திரையரங்குகள் கிடைத்துள்ளனவாம்.

    கர்நாடகத்தில் இப்படம் ரிலீசாக எவ்வித ஆட்சேபணையும் இல்லை என அம்மாநில பிலிம்சேம்பர் கூறிவிட்டது. ஆனாலும் கன்னட ரக்ஷன வேதிகாவின் மிரட்டல் திரையரங்கு உரிமையாளர்களை யோசிக்க வைக்கிறது.

    மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா மற்றும் உள்ளிட்ட வட இந்திய நகரங்களிலும் குசேலன் மற்றும் கதாநாயகுடு கணிசமான திரையரங்குகளில் வெளியாகிறது.

    குசேலனின் மூலப் பதிப்பு மலையாளத்தின் வெளியான கதபறயும் போல். இன்னும்கூட அந்தப் படம் கேரளாவின் சில இடங்களில் ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கேரளாவிலும் குசேலன் தமிழ் பதிப்பு வெளியாகிறது. சிவாஜியைப் போல அதிக திரையரங்குகளில் வெளியிடாமல், தேர்ந்தெடுத்த திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவதாக பிரமிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    குசேலனுக்கு 'யு':

    இதற்கிடையே குசேலன் திரைப்படத்தை இந்திய தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பார்த்தனர்.

    படத்தின் எந்தக் காட்சியும் ஆபாசமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ அல்லது ஆட்சேபணைக்குரியதாகவோ இல்லை எனக் கூறி யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X