வில்லு: சிக்குகிறார் 'வித்தை' காட்டியவர்!

பிரபு தேவா இயக்கத்தில் அய்ங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள படம் வில்லு. விஜய், நடிகை நயன்தாரா நடித்த இப் படத்தின் சண்டை காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த வில்லு பட தயாரிப்பாளர் நடிகர் அருண்பாண்டியன் போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுகுறித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இன்டர்நெட்டில் வெளியான வில்லு' படத்தின் சண்டை காட்சிகளை உடனே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசுக்கு கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
சைபர் கிரைம் உதவி கமிஷனர் டாக்டர் சுதாகரன் தலைமையிலான போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் மூலம் வில்லு படத்தின் சண்டை காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியானது கண்டறியப்பட்டது.
அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அந்த ஊழியருக்கு வில்லு படத்தின் சண்டை காட்சிகள் எப்படி கிடைத்தது, அதற்கு யார் பின்னணி என்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதற்கிடையில் படம் விரைவில் வெளியாக உள்ளதால் இதுபற்றி இப்போது விசாரிக்க வேண்டாம் என்றும், படம் வெளியான பிறகு விசாரித்தால் போதும் என்றும் சைபர் கிரைம் போலீசாரை தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனால் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்!.


Click it and Unblock the Notifications











