ஃபெப்சி மாநாடு - கமல், ரஜினி தொடங்கி வைக்கிறார்கள் - கருணாநிதிக்கு விருது

ஃபெப்சியின் தேசிய மாநாடு, அக்டோபர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை ஃபெப்சியுடன் இணைந்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரையுலக அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.
மாநாடு குறித்து ஃபெப்சி தலைவர் வி.சி.குகநாதனும், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
மாநாடு 9-ந் தேதி காலை தொடங்குகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாநாடு நடைபெறும்.
பின்னர் நேரு உள்விளையாட்டரங்கிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மாநாட்டின் துவக்க விழாவில் பாலசந்தர், பாரதிராஜா, ராதாரவி, சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்கள்.
அகில இந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மாலை நடைபெறும்.
இளையராஜா - ரஹ்மான் கச்சேரி...
2-ம் நாளன்று திரைப்பட தொழிலாளர் கருத்தரங்கு நடைபெறுகிறது. அன்று மாலை எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவா, தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
3-ம் நாளன்று சங்கத்தின் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பார்கள். அன்று மாலை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து சென்னையில் திரைப்பட தொழிலாளர்களுக்கான மருத்துவமனை கட்டப்படும். மாநாட்டை முன்னிட்டு 3 நாட்களும் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்று அவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











